ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்: விசாரணை அறிக்கை கேட்கும் தேசிய குழந்தைகள் ஆணையம்

பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்: விசாரணை அறிக்கை கேட்கும் தேசிய குழந்தைகள் ஆணையம்

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி

சென்னை, கே.கே.நகர் பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் வழக்கில் விசாரணையை துவங்கியது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை கேகே நகரில் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் துறையை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது முன்னாள் மாணவர்கள் பலர் புகார் அளித்துள்ளனர்.

  அதாவது ஆசிரியர் ராஜகோபாலன், பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் , மாணவர்களுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் மாணவிகளின் தோற்றம் பற்றி தவறான கருத்துகளைக் கூறுதல், இரவு நேரங்களில் அவர்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்தல், வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது அவர்களை சங்கடத்திற்கு உள்ளாகும்படி பேசுதல் என ராஜகோபாலன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

  இந்தவிவகாரம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்தநிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில்,

  இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை செய்து 3 நாட்களுக்குள் முழு அறிக்கையை அனுப்புமாறு தமிழக காவல்துறை தலைவர் ஜே.கே.திரிபாதிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

  கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வரும் இச்சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள ஆனந்த், அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, இதுபோன்ற குற்றங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறாமல் இருப்பதனை உறுதிப்படுத்தும் மாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

  மேலும் ஆன்லைன் வகுப்புகள் குறித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகளை பள்ளி, கல்லூரிகளில் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்தி ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Sexual harassment