'ஜெய்பீம் படத்தால் நாங்கள் கௌரவிக்கப்படுகிறோம்' - முதல் முறையாக நரிக்குறவர் பெண் வேட்பு மனுதாக்கல்!
'ஜெய்பீம் படத்தால் நாங்கள் கௌரவிக்கப்படுகிறோம்' - முதல் முறையாக நரிக்குறவர் பெண் வேட்பு மனுதாக்கல்!
நரிக்குறவ பெண் தனலட்சுமி
படக்குழுவினருக்கும் சூர்யாவிற்கும் நன்றி தெரிவிக்கும் போஸ்டரோடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நரிக்குறவர்கள் காண்பவர் கவனத்தை கவர்ந்தது.
ஜெய்பீம் திரைப்படத்தால் நாங்கள் வெகுவாக கௌரவிக்கப்படுகிறோம் என்று தமிழகத்தில் முதல் முறையாக ஆவடி மாநகராட்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த நரிக்குறவர் பெண் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் கடந்த 28-ம் தேதி முதல் தொடங்கி மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி தேர்தல் அலுவகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஆவடி மாநகராட்சியில் திமுக நாம் தமிழர், மக்கள் நீதி மையம், பாரதிய ஜனதா கட்சி, சுயேட்சை போன்ற வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் 26வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜெயா நகர் நரிக்குறவ காலனியை சேர்ந்த நரிக்குறவ பெண் தனலட்சுமி என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இவருக்கு நரிக்குறவ காலனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் மேளம் தாளம் முழங்க பட்டா மற்றும் அடையாள அட்டை வழங்கி அங்கீகரித்த முதல்வருக்கு நன்றி கூறும் விதமாக வாசகம் அடங்கிய பதாகை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தார்கள்.
இதேபோல ஜெய்பீம் படத்தின் மூலம் மலைவாழ் மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த சூர்யா மற்றும் பட குழுவினருக்கு நன்றி என்றும் வாசங்களை கையில் ஏந்தி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்தியேக பேட்டி அளித்த வேட்பாளர் தனலட்சுமி, தனக்கு வாக்களித்தால் இப்பகுதியில் பொது மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் முறையாக செய்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆவடி மாநகராட்சியில் முதல் முறையாக நரிகுறவர் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்ய வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-செய்தியாளர்: கன்னியப்பன்
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.