இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மண்டல இணை, துணை மற்றும் உதவி ஆணையாளர்களுடன் நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு
வடபழனி முருகன் கோவில் பிரசாதம் தரமானவை என ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு துறைக்கு வழங்கப்பட்டுள்ளது, அதிகார மீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கும்படி இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
என்றும் தரமான பிரசாதத்தை பறிமுதல் செய்ததற்காக உணவு பாதுகாப்பு துறையே அவர்கள் அதிகாரி மீது சிறிய துறை சார்ந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது என கூறினார்.
பட்ஜெட் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளில் கொடுக்கப்பட்ட 112 அறிவிப்புகளின், 1691 பணிகளின் நிலை குறித்து தெளிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது, 25 சதவீதத்திற்கும் மேலான ஒப்பந்தம் போடப்பட்ட பணிகள் இதுவரை நிறைவு பெற்றுள்ளது என கூறினார்.
அதிக படிகளைக் கொண்ட மலைக்கோயில்களில் பேருந்து வசதிகள் மற்றும் ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது அடுத்து வரும் மானிய கோரிக்கையில் இடம் பெரும் திட்டங்கள் நாளை மாலைக்குள் இறுதி வடிவம் பெறும் என்றார்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் அதிக வாடகை வசூலிப்பது தொடர்பாக சீராய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் சிலை தேடும் பணிக்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, நீதிமன்ற வழிகாட்டுதல்படி மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் சிலை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும், அனைத்து பெரிய திருக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை ஒலிக்க வேண்டும் என்பதுதான் கொள்கை, திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை மேற்கொள்ள ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
சொத்து வரி உயர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாடு அரசிற்கு 5 லட்சம் கோடி கடன் சுமை அதிகரித்து இருக்கிறது, ஒரு நாளிற்கு 23 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது, கடந்த 23 ஆண்டுகளில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை, சொத்து வரி உயர்வு என்பது ஒரு கசப்பான மருந்து தான், மக்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தினால் முதலமைச்சர் பரிசீலனை செய்து இதுகுறித்து முடிவெடுப்பார் என்றார்.
Must Read : மதப் பிரச்சனையால் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வர ஐ.டி நிறுவனங்கள் விரும்புகின்றன- அமைச்சர் பி.டி.ஆர்
இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் தங்கத்தை உருக்குகின்ற திட்டம் ஒரு வெற்றிகரமான திட்டமாக சட்டப்படி நிறைவேற்றப்பட்டுள்ளது. பல சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு தங்கத்தை உருக்குகின்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் வருடா வருடம் கோவில்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றார்.
Read More : தூத்துக்குடியில் 19 ஆண்டுகளாக பதநீர் விற்கும் பணத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கும் கிராம மக்கள்- அரசு உதவ கோரிக்கை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழங்கியுள்ள ஒய் பிரிவு பாதுகாப்பு குறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு இது அண்ணாமலை அடிக்கும் அரசியல் ஸ்டண்ட், என்றும் அண்ணாமலையின் எந்தவிதமான குற்றச்சாட்டுக்கும் பதில் தரும் அரசு திமுக அரசு எனவும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.