பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மடுவின்கரையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.51.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் பங்கேற்றனர். அப்போது பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பூஸ்டர் டோஸ் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதற்கு மத்திய அரசு விரைவில் பதிலளிக்கும் என நம்புகிறோம்.
அது வரை தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் திட்டம் மூலம் பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அத்திட்டத்தை தொடங்கி வைப்பேன்.
6 முதல் 12 வயதிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு கூறினாலும் அதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அது கிடைத்த உடனேயே தடுப்பூசி செலுத்த தமிழகம் தயாராக உள்ளது.
தமிழகத்தில் சித்த பல்கலைக்கழகம் அமையும் போது இந்திய மருத்துவ செவிலியர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். சித்த மருத்துவமனைகளில் பணிபுரியும் அலோபதி செவிலியர்களை நீக்கினால் தேவையற்ற குழப்பம் ஏற்படும்.
Also read... சித்திரை அமாவாசை மற்றும் வார விடுமுறை - தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் விளையாட்டு திடல் அமைக்க ரூ.25 லட்சம் கடந்த திமுக ஆட்சி காலத்திலேயே ஒதுக்கப்பட்டது. மாணவர்களுக்கான விளையாட்டு திடல்கள் அமைப்பது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் லாக் அப் மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து கேட்டதற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.