மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்ட் 1,800 மருத்துவர்களின் ஒப்பந்த காலம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதால் அவர்கள் பணிகளிலிருந்து நீக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
பிப்ரவரி மாதம் 2021 கடந்த அதிமுக அரசால் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளில் 1,800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு முன்பே கொரோனா முதலாவது அலையில் அரசின் அழைப்பை ஏற்று பணிக்கு வந்தவர்கள் தான் இந்த மருத்துவர்கள்.
கொரோனா முதல் அலை முடிந்த நேரத்தில் மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்டனர். சில மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கிய போது பல மருத்துவர்கள் கொரோனா நோயாளிகள் அதிகம் இருந்த சென்னை மருத்துவமனைகளில் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன் பின் டெங்கு பணி, வீடு வீடாக என்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, கொரோனா நோயாளிகளை வீட்டில் சென்று பராமரிப்பது, பள்ளிகளில் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கொரோனா மூன்றாவது அலையிலும் பணி செய்த இந்த மருத்துவர்களின் சேவை மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இரண்டு ஆண்டுகள் களத்தில் அயராது உழைத்த தங்களை அரசின் வேறு திட்டங்களில் பணியமர்த்திக் கொள்ள வேண்டும் என மினி கிளினிக் மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர், செயலர், அந்தந்த ஊர்களில் உள்ள எம் எல் ஏக்கள் என எல்லோரையும் சந்தித்தும் எந்த பலனும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 1800 பேருக்கும் முன்னுரிமை வழங்கி வேறு பணிகளில் சேர்த்திட கோரிக்கை வைக்கின்றனர்.
Also read... ஓபிஎஸ்-க்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு
மற்ற மருத்துவர்களுக்கு எம் ஆர் பி தேர்வு எழுதும் போது பணிக்காலத்துக்கு ஏற்ப கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாதம் 60,000 சம்பளம் பெறும் அவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
டிசம்பர் 31ம் தேதியுடன் மினி கிளினிக்குகள் மூடப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்கு மருத்துவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.