இனி விசிலுக்கு பதில் பாட்டு.. சென்னை மாநகராட்சி அடடே நடவடிக்கை!!

குப்பை சேகரிக்கும் வண்டி

பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பாடலுடன் வீடு வீடாக குப்பையை சேகரிக்க மாநகராட்சி புதிய ஏற்பாடு செய்துள்ளது.

  • Share this:
தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, இனி விசில் சத்தத்துக்கு பதிலாக, விழிப்புணர்வு பாடலை ஒலிக்க செய்து வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் புதிய முறையை சென்னை மாநகராட்சி நடைமுறை படுத்தி உள்ளது.

"ஒ.. ஓ... நம்ம ஊரு... செம ஜோரூ... சுத்தி பாரு... சுத்தம் பாரு..." என்ற பாடலுடன் சென்னை வீதிகளில் குப்பை சேகரிக்கும் வாகனம் வரத்தொடங்கி உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இவற்றில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பை வீடுகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது.

சென்னையில் வீடு வீடாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனங்களில் சென்று குப்பையை சேகரிக்கின்றனர். வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் வண்டி வந்திருப்பதை, விசில் சத்தம் எழுப்பி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வந்தனர். அப்போது முககவசத்தை கழட்ட வேண்டி இருந்தது. மேலும், விசிலை அடிக்க கைகளை தொடர்ச்சியாக சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை பிரச்சனையாக இருந்தது. இதனால் தூய்மை பணியாளர்களுக்கு தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக குப்பை சேகரிக்கும் ஊழியர்கள் விசில் சத்தத்திற்கு பதிலாக 'வாகன ஒலி' சத்தம் எழுப்பி குப்பை சேகரிக்கும் முறையை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால் பல்வேறு வாகன 'வாகன ஒலி' சத்தங்களால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படக்கூடும்.

Also read: போஸ்ட் கோவிட் 'வார் ரூம்' சென்னை மாநகராட்சி புதிய முயற்சி!

அதனால் விசில் சத்தத்திற்கு பதிலாக, குப்பை குறித்த விழிப்புணர்வு பாடலை ஒலிக்க செய்ய மாநகராட்சி திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளது. பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பாடலுடன் வீடு வீடாக குப்பையை சேகரிக்க மாநகராட்சி புதிய ஏற்பாடு செய்துள்ளது. வீட்டருகே வண்டி வரும் போது குப்பை சேகரிக்கும் பாடல் ஒலிக்கும். இந்த பாடலை வைத்து குப்பை வண்டி வருகிறது என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

இதனால்,  தூய்மை பணியாளர்களுக்கும் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published: