முழு ஊரடங்கு: தெரு நாய்களுக்கு எப்படி உணவு வழங்குவது? அரசு யோசனை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

நாய் (கோப்பு படம்)

தெரு நாய்கள் மற்றும் விலங்குகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  • Share this:
    கொரோனா ஊரடங்கு காரணமாக தெரு நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு எப்படி உணவு வழங்குவது என்பது குறித்து யோசனைகளை வழங்க தமிழக அரசுத் தரப்புக்கும், மனுதாரர் தரப்புக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா ஊரடங்கு கடந்த 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்
    ஆதரவற்றோர் பலர் தெருக்களையே வீடுகளாக கொண்டு வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் உள்ளது.

    அதே போல் அன்றாட கூலித்தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்துள்ளதால், உணவுக்காக சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தவித்து வரும் மக்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர். ஊரடங்கு சமயத்தில் மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், தெரு நாய்கள் மற்றும் இதர விலங்குகளின் நிலை என்ன என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

    இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தெரு நாய்கள் மற்றும் விலங்குகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஊரடங்கு காரணமாக ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் தெரு நாய்கள், விலங்குகள் உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தெரு நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு எப்படி உணவு, தண்ணீர் வழங்கலாம் என்பது குறித்த யோசனைகளை தெரிவிக்கும்படி, மனுதாரர் தரப்புக்கும், அரசுத்தரப்புக்கும் அறிவுறுத்தி, விசாரணையை நாளை தள்ளிவைத்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: