சென்னையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கூட்டாஞ்சோறு குற்றவாளிகள் 3 பேர் கைது..

சென்னையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கூட்டாஞ்சோறு குற்றவாளிகள் 3 பேர் கைது..

சென்னையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கூட்டாஞ்சோறு குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து,16 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
கடந்த 18 ம் தேதி இரவு திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கவிதா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவர் கழுத்தில் இருந்த ஒன்பது சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

அதேபோல அதற்கு அடுத்த நாளில் அண்ணா சாலை தர்கா பகுதியில் சாந்தி என்ற பெண்ணை தாக்கி 4 சவரன் நகையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அறுத்து சென்றுள்ளனர்.
இதற்கு அடுத்தடுத்த நாட்களில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு சம்பவம் நடந்தேறிவந்தது.

இதனை தடுப்பதற்காக திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அனைத்து செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இதனையடுத்து எழும்பூர் பகுதிகளிலும் இதே நபர்கள் கைவரிசை காட்டி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்களை பிடிப்பதற்காக எழும்பூர் காவல் உதவி ஆணையர் ரகுபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Also read: காதலனுடன் திருமணமான புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பிய மகள்: மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

இந்தநிலையில் இன்று அதிகாலை சிந்தாதிரிப்பேட்டை பின்னி லிங்க் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக ஒரே வாகனத்தில் வந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் செயின் மற்றும் மொபைல் பறிப்பு குற்றவாளிகள் என தெரியவந்தது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் வைத்து சோதனை செய்தபோது மேற்கண்ட அனைத்து கொள்ளை வழக்குகளிலும் ஈடுப்பட்டவர்கள் பிடிபட்ட மூன்று நபர்கள் தான் என தெரியவந்தது. காவல் நிலையம் அழைத்து வந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த கிருபாநந்தன்(19), ஆவடியை சேர்ந்த பால் சிவா (எ) சிவகுமார்(20), அயனாவரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட 3 நபர்களும் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே அண்ணா நகர், நுங்கம்பாக்கம், குமரன் நகர், திருவல்லிக்கேணி, எழும்பூர், துரைபாக்கம், செங்குன்றம், சூளைமேடு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்கள் மற்றும் 15 பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட கிருபானந்தம் மீது அண்னா நகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு மட்டுமல்லாமல் கடையை உடைத்து திருடுவது, பேட்டரி திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது, வழிப்பறிகளில் ஈடுபடுவது போன்ற அனைத்து வகையான குற்ற சம்பவங்களிலும் இவர்கள் குழுவாகச் சேர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

பொதுவாக இதுபோன்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கூட்டாஞ்சோறு குற்றவாளிகள் என அழைப்பதுண்டு.
இவர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தங்களுக்கு தெரிந்த இடத்தில் நிறுத்திவிட்டு ஒவ்வொரு கொள்ளைச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு இருசக்கர வாகனத்தை பயன்படுத்திவந்துள்ளனர். பின் கொள்ளை சம்பவத்தில் கிடைத்த பொருட்களை விற்று அதில் வரும் பணத்தை வைத்து மது, கஞ்சா போன்ற போதை வஸ்துகளுடன் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது குற்றவாளிகளில் ஒருவர் அனைத்து குற்ற சம்பவங்களில் வெள்ளைநிற செருப்புகளை அணிந்து கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். விசாரணையில் குற்றவாளியின் வெள்ளை செருப்பை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கைதுசெய்யப்பட்ட குற்றவாளியிடம் அது குறித்து கேட்டபோது வெள்ளை செருப்பை பாலிதீன் பேப்பரில் சுற்றி புறநகர் பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் மறைத்து வைத்திருப்பதாக கூறியதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அதனையும் பறிமுதல் செய்தனர்.
இவர்களிடமிருந்து 16 சவரன் நகைகள் மற்றும் 5 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் இவர்களை சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: