சென்னையில் 2015- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2- ஆம் தேதி 294 மில்லி மீட்டர் மழை பதிவானது. நுறு ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழை ஒரே நாளில் பதிவாகி மக்களை திணறடித்தது. சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், மதனந்தபுரம், ராயப்பாநகர், பழைய பெருங்களத்தூர், மணிமங்களம் உள்ளிட்ட பகுதிகள் கடலாக மாறி போகின. கனமழையோடு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரும் சேர்ந்து கொள்ள, ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் உயிரையும் உடமைகளையும் இழந்து நிற்கதியாய் நின்றனர்.
இப்படி வெள்ளபாதிப்புக்கு ஆளான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள், தற்போதைய மழையில் கொஞ்சம் தப்பித்துகொண்டனர். அதற்கு காரணம் சிறிது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். கடந்த ஆண்டு பல கிலோ மீட்டர் தூரம் உள்ள அடையாறு ஆற்றங்கரையை பொதுப்பணித்துறை சார்பில் தூர் வாரி, அகலப்படுத்தி, ஆழப்படுத்தியுள்ளனர். இதனால் மழைநீர் தேங்காமல் வடிந்து செல்கிறது.
எனினும் ஒருசில பகுதிகளில் சாலையில் சிறிதளவு மழைநீர் தேங்கி நிற்கிறது. பெரிய பாதிப்பு ஏற்படாதவாறு அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து பகுதிகளிலும் முடுக்கி விட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இருக்கின்ற இடங்களை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்ததன் விளைவை சென்னை மக்கள் ஆண்டுதோறும் அனுபவிக்கின்றனர். மழை காலங்களில் வெள்ள நீர் வடியும் வகையில் பல்லாயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள வெள்ள வடிகால் வசதிகள் அறிவியல் பூர்வமாக ஆய்வுகளை மேற்கொண்டு கட்டியவை அல்ல என்பது நீரியில் நிபுணர்களின் கருத்ததாக உள்ளது.
தாழ்வான பகுதிகள், மேடான பகுதி என புவியியல் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளாமல் வெள்ள வடிகால் வசதிகளை கட்டியதே நீர் வடியாமல் இருப்பதற்கு காரணம். அறிவியல் பூர்வமான திட்டத்தைக் கொண்டு இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.