• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் கொட்டும் கனமழை : தாழ்வான பகுதிகளில் வடியாத வெள்ளம்

சென்னையில் கொட்டும் கனமழை : தாழ்வான பகுதிகளில் வடியாத வெள்ளம்

சென்னையில் கனமழை

சென்னையில் கனமழை

சென்னையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால்,  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

  • Share this:
    சென்னையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால்,  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வடியாத நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் வட சென்னையின் திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதேபோல ராயபுரம், பாரீஸ், காமராஜர் சாலை, பட்டினம்பாக்கம், மயிலாபூர், சேப்பாக்கம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், போரூர், நந்தம்பாக்கம், விமானநிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிள் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தியாகராய நகரில் தேங்கியுள்ள மழைநீரை, ராட்சத மின்மோட்டார் கொண்டு அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றது. பாண்டி பஜார் மற்றும் வள்ளுவர் கோட்டம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான முக்கிய இணைப்பு சாலையான, கோபதி நாராயணா சாலையில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தது. இந்நிலையில், ராட்சத மின்மோட்டாரை கொண்டு மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றது.

    சென்னையை அடுத்த தாழம்பூர் டிஎல்எஃப் சாலையில் தேங்கியுள்ள நீரை, ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்றது. மழைநீர் செல்லும் வடிகால்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டன. வியாசர்பாடி உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளிலும் தண்ணீர் வடியாத சூழல் நிலவுகிறது. பல பகுதிகள் தனித்தீவுகள் போலவே காட்சியளிக்கின்றன. பெரவள்ளூரில் ஜவஹர் காலனி, ஜி.கே.எம். காலனி பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் வெளியில் வர முடியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. பெரவள்ளூர் காவல் நிலையத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் காரணமாக மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் கனமழை காரணமாக அரசு மகப்பேறு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மழை நீரில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த செம்பியம் மற்றும் வியாசர்பாடி தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகு மூலம் பெண்கள், குழந்தைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என 17 பேரை பத்திரமாக மீட்டனர்.

    ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சிவாஜி நகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், முதல் தளத்துக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அடிப்படைத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலையில், இரண்டு நாட்களாக உணவு இல்லாமல் தவித்துவருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தாம்மாள் சாலையில் இடுப்பளவு மழைநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 2 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாததால், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க வெளியேவர முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இப்பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டார் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    சென்னையில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் மக்களை மீட்பதற்காக 41 இடங்களில் படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அடையார் ஆற்றை ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூரில் தொடங்கி, மண்ணிவாக்கம், ரூபி பில்டிங், முடிச்சூர் வழியாக செல்லும் அடையார் ஆறு நீரோட்டத்தை ஒவ்வொரு பகுதியாக சென்று அவர் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமுதா, மழைநீர் வெளியேறுவதற்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Must Read : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (10.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

    மழை நீர் தேங்காத வகையில், தேவையான இடங்களில் கட்டமைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமுதா கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: