தமிழ்நாட்டில் 1.48 கோடி பேர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இது வரை 10.63 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் டோஸ் 92.4% பேரும் இரண்டாவது டோஸ்78% பேரும் செலுத்தியுள்ளனர். எனினும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ளது என்றும் இரண்டாவது தவணை 1.48 கோடி பேர் உரிய நேரத்தில் செலுத்தவில்லை, அவர்களை தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளளை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மாநில சராசரியை விட குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள 25 மாவட்டங்களில் ஏன் குறைவாக உள்ளது என காரணங்கள் கண்டறியவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் சராசரியாக 92.4% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இரண்டாவது தவணை 78% பேர் செலுத்தியுள்ளனர்.
ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, தருமபுரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திருப்பத்தூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, கோவில்பட்டி, பெரம்பலூர், திருநெல்வேலி, அறந்தாங்கி, திருவாரூர், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், செய்யாறு, சிவகாசி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய 25 சுகாதார மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை மாநில சராசரியான 92.4% விட குறைவாக உள்ளது.
அதே போன்று தருமபுரி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, மதுரை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தேனி, நாமக்கல், திருநெல்வேலி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கோவில்பட்டி, திருவள்ளூர், தென்காசி, சேலம், செங்கல்பட்டு, ஈரோடு, திருவாரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, அறந்தாங்கி, திருச்சி, திருப்பூர், சிவகாசி ஆகிய 25 சுகாதார மாவட்டங்களில் மாநில சராசரியான 77.4% விட இரண்டாம் தவணை தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் எப்படி பூத் வாரியாக வாக்காளர் பட்டியல் எடுக்கப்படுமோ அது போல இந்த மாவட்டங்களில் நகர்ப்புறங்களில் தெரு வாரியாகவும் கிராமப்புறங்களில் குடியிருப்பு வாரியாக தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியலை எடுத்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி தயக்கம் இல்லை, கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என்ற அலட்சியம் தான் உள்ளது. எனவே அவர்களை முதலில் கண்டறிந்து தனிதனி நபர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Also read... தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா? - ராதாகிருஷ்ணன் விளக்கம்
கையிருப்பில் உள்ள 1.48 கோடி டோஸ் தடுப்பூசி எந்த பகுதியில் தேவை என்பதை கண்டறிந்து அங்கு அதை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று மாவட்ட ஆட்சியர்களிடம் தலைமை செயலர் ஆலோசனை நடத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் இதை செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
முதல் டோஸ் செலுத்தாத 40 லட்சம் பேரில் 30 லட்சம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். முதல் இரண்டு அலைகளின் போது ஊரடங்கு போடப்பட்டிருந்ததால் முதியவர்கள் வெளியே செல்ல மாட்டார்கள் எனவே தடுப்பூசி தேவை இல்லை என குடும்ப உறுப்பினர்கள் அலட்சியமாக இருந்தார்கள். ஆனால் தற்போது எல்லாரும் எல்லா இடத்துக்கும் செல்வதால் அவர்களை தடுப்பூசி செலுத்த அவர்கள் பிள்ளைகள் குடும்ப உறுப்பினர்கள் கண்டிப்பாக அழைத்து வர வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Radhakrishnan