சென்னையில் நள்ளிரவில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல்(21). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பணிமுடித்து புதுவண்ணாரப்பேட்டை இளைய தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றது. சம்பவம் தொடர்பாக சாமுவேல் புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து சாமுவேலிடம் செல்போன் பறித்து சென்ற ராஜேஷ்(22) என்பவரை கைது செய்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கொடுங்கையூர் எழில் நகர் ரயில்வே கேட் அருகே சென்னை வேளச்சேரி விஜயா நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்த பாலாஜி(25) தன்னுடைய மினி வேனில் வந்து ரயில்வே கேட் திறப்பதற்காக காத்திருந்துள்ளார். அப்போது திடீரென்று அங்கு வந்த 3 பேர் மினி வேன் கண்ணாடிகளை உடைத்து உள்ளே அமர்ந்திருந்த பாலாஜியை சரமாரியாக தாக்கிவிட்டு தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்டினர். இதில் பாலாஜிக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாலாஜி வைத்திருந்த ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ. 5 ஆயிரம் பணத்தையும் பறித்து சென்றனர்.
இதில் பாலாஜி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பாலாஜியை தாக்கி செல்போன் மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணா(22), ஜெயராம்(19), புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்கின்ற துப்பாக்கி(20) ஆகியோரை கைது செய்தனர்.
கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட 4 பேரும் நண்பர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று பாரிமுனையில் ஒருவரிடம் செல்போன் பறித்துவிட்டு, அதன்பின்னர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாமுவேலிடம் செல்போனை பறித்து கொண்டு காசிமேடு பகுதியில் ராஜேஷை இறக்கவிட்டு சென்றுள்ளனர். சாமுவேலிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதை புதுவண்ணாரப்பேட்டை போலீசார் உறுதிசெய்து காசிமேட்டில் இருந்த ராஜேஷை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் சென்றபோது பாலாஜியை தாக்கி செல்போனை பறித்துகொண்டு கொருக்குப்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணா, ஜெயராம், ஆகாஷை கொடுங்கையூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் பிடிபட்ட 4 பேரிடமும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக தொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர் காவல் நிலையங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீனவர்கள், வியாபாரிகள் என நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் அதிகமுள்ள வடசென்னை பகுதியில் நடந்த செல்போன், பண பறிப்பு சம்பவங்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர்: அசோக்குமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chain Snatching, Crime News, Mobile phone, Theft