தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 ஊராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மனுதாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேட்பு மனுதாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கும் அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் மக்கள் இயக்கம் ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன இதனால் பல முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில், சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள 72வது வார்டில் பிரபல கானா பாடகரும், வழக்கறிஞருமான கானா பாலா என்ற பாலமுருகன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
அவர், வேட்புமனு தாக்கல் செய்தபோது, தான் பிறந்து வளர்ந்த இந்த பகுதியில் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவன் என்று கூறிய கானா பாலா, நான் ஏற்கனவே இதே பகுதியில் போட்டியிட்டு 4 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளேன் என்றும் இந்த முறை நிச்சயமாக வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Must Read : டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சொந்த மண்ணில் களமிறங்கியுள்ள கானா பாலா, தனது பாடல்கள் மூலம் மக்களின் மனங்களை வென்றதைப்போல, தேர்தலிலும் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.