கொரோனாவால் பாதித்தோருக்கு இல்லம் தேடி வரும் உணவு... உதவிக்கரம் நீட்டும் சென்னை வாசிகள்...

கோப்புப் படம்

கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில். மனிதர்கள் கரம் கோர்த்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவத் தொடங்கியுள்ளனர். பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்றே தெரியாமல் இருக்கும் இன்றைய உலகில், எங்கோ இருக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கு சமைத்துக் கொடுத்து உதவிக்கரம் நீட்டுகிறார்கள் சென்னை வாசிகள்.

 • Share this:
  சமூக வலைதள பயன்பாடு குறித்து பல்வேறு எதிர்மறை கருத்துகள் உலா வந்த போதும், அந்த சமூக வலைதளங்கள் தான் சென்னை பெருவெள்ளம், புயல் பாதிப்பு போன்ற பேரிடர்களின் போது, உதவி கோருவோரை கண்டறிந்து தேவைகளை பூர்த்தி செய்தது. அந்த வரிசையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு உணவு தந்து உதவிக் கொண்டிருக்கிறது.

  கொரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உணவு சமைக்கவோ, கடைகளில் சென்று வாங்கவோ இயலாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றன. இதுபோன்ற, சூழலை எதிர்க்கொண்ட சென்னை அடையாறை சேர்ந்த தீபிகா, தன்னால் இயன்ற உதவியை செய்ய முயன்றுள்ளார். அதற்காக, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தேவையை இணையதளம் மூலம் அறித்து, அவர்களுக்கு தாமாக முன்வந்து உணவு சமைத்து டெலிவரி செய்ய முடிவு செய்தார்.

  இதுகுறித்து, யோசனையுடன் "CookForCovid" என இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இதை அறிந்த பலர், தாமாக முன்வந்து தங்களது வீடுகளில் உணவு சமைத்து, குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பசியாறி வருவதாக தீபிகா கூறுகிறார்.  மேலும், தீபிகாவுடன் கரம் கோர்த்து, ஏற்கனவே கொரோனா தாக்கத்தை உணர்ந்தவர்கள், தற்போது இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர். அத்துடன், இது தங்களுக்கு மன நிறைவு அளிப்பதாகவும் கூறுகின்றனர்.  CookForCovid என்ற அமைப்பு உருவானது மூலம், சென்னையில் தற்போது சுமார் 200 பேர், தங்களது வீடுகளில் சமைத்து, கெரோனாவால் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இந்த உணவை கொண்டு சேர்க்க, கல்லூரி இளைஞர்கள் சிலர் முன்வந்துள்ளனர். அத்துடன், ஸ்விக்கி, டன்ஜோ போன்ற ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் மூலமும் டெலிவரி செய்யப்படுகிறது.

  குடும்பத்தில் இரண்டு மூன்று பேருடன், கூடுதலாக நான்கு ஐந்து பேருக்கு சமைத்து கொடுப்பது பெரிய வேலையாக கருதவில்லை என்று தாய்மார்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சேவைக்காக சிலர் நிதியுதவி அளிப்பதை கூட ஏற்க மறுத்து வருகின்றனர்.

  மேலும் படிக்க... கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் தயிர் பச்சடி... ரெசிபி இதோ..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: