சென்னையில் பிரியாணி கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த உணவு டெலிவரி ஊழியர்கள்!

வரிசையில் காத்திருக்கும் உணவு டெலிவரி ஊழியர்கள்

ஞாயிற்றுக்கிழமையான இன்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக இறைச்சி கடைகளை திறக்க அனுமதியில்லை.

  • Share this:
    சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள தனியார் பிரியாணி கடைகளில் பிரியாணி வாங்குவதற்காக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கி சென்றனர்.

    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் இறைச்சி, மீன், முட்டை, உள்ளிட்டவைகளை வாங்கி சமைத்து உண்டு மகிழ்வது அசைவ பிரியர்களின் வழக்கம்.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக இறைச்சி கடைகளை திறக்க அனுமதியில்லை. இதனால், தனியார் உணவு டெலிவரி செய்யும் செயலிகள் மூலம் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து அசைவ பிரியர்கள் உண்டு மகிழ்ந்துள்ளனர்.

    இதன் காரணமாக பல்வேறு உணவகங்களிலும், வழக்கத்துக்கு மாறாக இன்று டெலிவரி செய்யும் ஊழியர்கள் பிரியாணி வாங்குவதற்காக  நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கி சென்றனர். பல உணவகங்களில் அதிகளவில் ஆர்டர்கள் குவிந்ததால், டெலிவரி ஊழியர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    மேலும் உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அரசு அறிவித்த நேரத்தை தாண்டியும் விதிகளை மீறி இந்த கடைகளில் பிரியாணி பார்சல் வழங்கப்பட்டு வந்தது.

    மேலும் கொரோனா காலம் என்பதால் கடையில் பிரியாணி வாங்க டெலிவரி ஊழியர்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நிற்பதால் கொரானோ பரவும் சூழலும் ஏற்ப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி, டெலிவரி வாங்குவதற்கு வரிசையில் நின்றவர்களை கலைந்து போக சொல்லியும், விதிகளை மீறிய கடைகளுக்கு ரூ.1000 அபராதமும் விதித்துள்ளனர்.

    செய்தியாளர் - சோமசுந்தரம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: