திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; குழந்தைகள் மீட்பு!

கஸ்தூரிபாய் மருத்துவமனையில் தீ விபத்து

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 குழந்தைகளும் பாதுகாப்பாக வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். தற்போது அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த பச்சிளங்குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

    திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று இரவு 9 மணி அளவில் இரண்டாவது மாடியில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு அங்குமிங்கும் சிதறி ஓடினர். இதனால் மருத்துவமனை வளாகம் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஏசியில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்தது.

    தீ விபத்து ஏற்பட்ட அறைக்குப் பக்கத்தில், பிறந்த பச்சிளம் குழந்தைகள் 47 பேர் மற்றும் சில குழந்தைகளது தாயாரும் உடன் இருந்ததால் பெரும் பதட்டம் நிலவியது. புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அங்கிருந்த அனைவரும் உடனடியாக மற்றொரு பிரிவுக்கு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

    தகவலறிந்து சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து அங்கிருந்த நோயாளிகளை சமாதானப்படுத்தினார். குழந்தைகள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை யாரும் பயப்பட வேண்டாம் என்று சொல்லி அவர்களை ஆறுதல் படுத்தினார்.

    இதையடுத்து குழந்தைகளின் தாயார் மற்றும் உறவினர்களை உள்ளே வந்து குழந்தைகளைப் பார்ப்பதற்கும் காவல்துறையிடம் அனுமதி வாங்கி கொடுத்ததையடுத்து அவர்கள் நிம்மதி அடைந்தனர். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    அப்போது செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, யாரும் பதட்டம் அடையவோ, பயப்படவோ வேண்டாம் அனைவரும் நலமாக இருக்கிறார்கள், தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்பட்டு வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும் மருத்துவமனை முன்பு ஏராளமாக கூடியிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்துவது காவல்துறைக்கே மிகப்பெரிய சவாலாக மாறியிருந்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: