சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கன
மழை பெய்து வருகிறது. அதனால், பலபகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், கனமழையுடன் இன்று காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல்வேறு இடங்களிலும் மரம் விழுந்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்த இளைஞர் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று எண்ணி, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த இளைஞர் உயிருடன் இருப்பதை அறிந்து உடனடியாக அவரை தனது முதுகில் சுமந்துச் சென்று ஆட்டோவில் ஏற்றி அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்துச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.