முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்தால் சொந்த வீடு: வதந்தியால் அலைமோதிய கூட்டம்!

அலைமோதிய கூட்டம்

இலவச வீடு ஒதுக்கீடு கோரி தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க பலரும் காத்துகிடப்பதாகவும், தொற்று ஆபத்து இருப்பதால் நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கூறியிருந்தது. அதையும் மீறி ஏராளமானோர் இன்று குவிந்தனர்.

  • Share this:
    முதலமைச்சரின் தனிப் பிரிவில் மனு அளித்தால் சொந்த வீடு வழங்கப்படும் என பரவிய வதந்தியால் சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னையில் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் முதலமைச்சரின் தனிப் பிரிவில் மனு அளித்தால் 100 நாட்களுக்குள் வீடு கிடைக்கும் என்ற வதந்தி பொதுமக்கள் இடையே பரவத் தொடங்கியது.  இதை உண்மையென நம்பிய பொதுமக்கள் முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு அளிப்பதற்காக தலைமை செயலகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    இன்று அதிகாலையிலேயே தலைமை செயலகத்தில் குவியத் தொடங்கிய மக்கள்,  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமர்ந்து  வீடு வேண்டி மனு எழுதி காத்திருக்க தொடங்கினர்.  கொரோனா பரவல் ஆபத்து இருப்பதால் முதலமைச்சரின் தனிப் பிரிவில் மனு அளிக்க யாரும் நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு சார்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், சமீப காலங்களில் இலவச வீடு ஒதுக்கீடு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க காத்து நிற்கின்றனர்.

    இதையும் படிங்க: சென்னை புறநகர் ரயில் சேவையில் ஆண்களுக்கான நேரக் கட்டுப்பாடு நீக்கம்!


    முதியோர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இதில் அடங்குவர். தற்போது கோவிட் 19 என்ற பெருந்தொற்று கட்டுக்குள் இருந்தாலும், இவ்வாறு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இத்தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க குவிந்து வருவதால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு!


    முதலமைச்சரின் தனிப்பிரிவில் தபால் / இணையதளம் ((www.cmcell.tn.gov.in)/ மின்னஞ்சல் (cmcell@tn.gov.in) மற்றும் முதலமைச்சர் உதவி மையம் (cmhelpline.tnega.org) ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டுவருகிறது. எனவே, நேரடியாக மனு அளிப்பதற்கு பதிலாக இணைய வழியாக மனுக்களை அனுப்பலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதனையும் மீறி இன்று ஏராளமானோர் மனு அளிக்க குவிந்தனர். மக்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: