தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்
திமுக பெருவாரியாக இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியில் கும்பகோணம் மாநகராட்சி
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் 20 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. இதில்
சென்னை மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளராக ஆர்.பிரியா இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. சென்னை, தாம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் பட்டியல் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியை ஒரு பெண் மேயர் ஆளும் வாய்ப்பு உருவானது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக மேயர் வேட்பாளர் பட்டியலில் உள்ள பிரியா வடசென்னை பகுதியான திரு.வி.க.நகரிலுள்ள 74-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
திமுகவில் மேயர் வேட்பாளர் ரேஸில் கொளத்தூர் மாநகராட்சியின் 70 ஆவது வார்டில் போட்டியிட்ட ஸ்ரீதரணி, 159 ஆவது வார்டில் போட்டியிட்ட அமுதபிரியா செல்வராஜ், 74 ஆவது வார்டில் போட்டியிட்ட பிரியா ஆகியோர் இடையே கடுமையான போட்டி இருந்தது. இவர்களில் படித்தவர்கள் மற்றும் எந்தவித சர்ச்சைப் பின்னணியும் இல்லாதவர்களை திமுக தலைமை தேர்ந்தெடுக்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் பிரியாவின் பெயரை அறிவாலயம் டிக் அடித்துள்ளது. 28 வயதான பிரியா எம்.காம் பட்டதாரி. இவர் முன்னாள் எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது குடும்பம் 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளது. அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே.சேகர்பாபுவின் ஆதரவாளராக இருப்பதால் இவர் மேயர் வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக முன்பே கூறப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.