குன்றத்தூர் அருகே வாடகை பாக்கி தராமல் செல்ல முயன்ற வடமாநில வாலிபர்களை சரமாரியாக தாக்கிய தேமுதிக பிரமுகர் கைது!

வடமாநில வாலிபர்களை சரமாரியாக தாக்கும் தேமுதிக பிரமுகர்

இந்த சம்பவத்தை அந்த இளைஞர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

  • Share this:
    குன்றத்தூர் அருகே வாடகை பாக்கி தராமல் சொந்த ஊர் செல்ல முயன்ற வடமாநில வாலிபர்களை தேமுதிக பிரமுகர் சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தேமுதிக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார் சாகு(32), இவர் தனது சகோதரர் பிரதாப் சாகு என்பவருடன் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் தங்கி தனியார் நிறுவனங்களுக்கு வடமாநில வாலிபர்களை சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இங்கு பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களை தேமுதிக, காஞ்சிபுரம் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சுரேஷ்ராஜ் (40), என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்க வைத்திருந்துள்ளனர்.

    இந்நிலையில், வடமாநில சகோதரர்கள் வீட்டு உரிமையாளர் சுரேஷ் ராஜூக்கு கடந்த மூன்று மாதங்களாக வாடகை பாக்கி ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் பணம் தர வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக வடமாநில வாலிபர்கள் சொந்த ஊருக்கு கிளம்பி செல்வது சுரேஷூக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுரேஷ் ராஜ் நேற்று இரவு வடமாநில இளைஞர்கள் தங்கியுள்ள வீட்டிற்குள் சென்று அவர்களை பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

    இந்த சம்பவத்தை அந்த இளைஞர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அந்த வீடியோ காட்சிகளில் சுரேஷ் ராஜ் வடமாநில வாலிபர்களை முட்டி போட வைத்தும், உடலில் சட்டை போடாமலும் சரமாரியாக அடித்து உதைக்கிறார். இதில், வலி தாங்க முடியாமல் அந்த வாலிபர்கள் துடித்து காலில் விழுகின்றனர். அப்போதும் சுரேஷ் ராஜ் விடாமல் அடித்து உதைக்கிறார்.

    இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோனி சகாய பாரத் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுரேஷ்ராஜை கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், செய்தபோது வடமாநில வாலிபர்களை சரமாரியாக அடித்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    வாடகை பாக்கி தராமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வட மாநில வாலிபர்களை தேமுதிக பிரமுகர் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - சோமசுந்தரம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: