எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பெயரில் போலி பாஸ்: காரில் பெண்ணுடன் இருந்த பல் மருத்துவர் கைது

மோசடியில் ஈடுபட்ட பல் மருத்துவர், கார்

எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பெயரில் போலி பாஸ் பயன்படுத்திய பல் மருத்துவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

  • Share this:
நாடாளுமன்ற உறுப்பினர் பெயரில் காரில் போலியான பாஸ் வைத்துக் கொண்டு பள்ளிகாரணையில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பள்ளிகரணை ரேடியல் சாலையில் இரு புறமும் உள்ள சதுப்பு நில பகுதியில் சாலையை ஒட்டி புதர் போல் செடிகள் வளர்ந்து, மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இங்கு திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அதனை கட்டுப்படுத்த பள்ளிகரணை பகுதி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவ்வழியாக செல்லும் சிலர் வாகனங்களை நிறுத்தி சதுப்பு நிலத்தில் இருக்கும் பறவைகளை கண்டுகளிப்பார்கள்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு 9 மணியளவில் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் புதரை ஒட்டிய பகுதியில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வழியாக வந்த பள்ளிகரணை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் புதரை ஒட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு கார் மீது சந்தேகமடைந்து, கார் அருகில் சென்று பார்த்த போது காரில் ஒரு நபர் இளம்பெண்ணுடன் அரை குறை ஆடைகளோடு உல்லாசத்தில் ஈடுபட்டிருந்ததை பார்த்துள்ளார்.

பின்னர் காரின் முன்பகுதியில் எம்.பி பாஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த ஆய்வாளர் இது யாருடைய கார் என கேட்டுள்ளார். அதற்கு, தான் தென்சென்னை திமுக எம்.பிக்கு நெருக்கமான உறவினர் என காரில் அமர்ந்தபடியே திமிராக பதிலளித்துள்ளார் காரில் பெண்ணுடன் இருந்தவர்.

பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதற்கு என்று எண்ணிய ஆய்வாளர் இதுபோன்ற இடங்களில் பெண்களுடன் காரில் நிற்ககூடாது என அவரை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

போலீசார் தன்னை விட்டா போதும் என காரில் இருந்த இளம்பெண் அரை குறை ஆடையுடன் காரில் இருந்து இறங்கி அவருடைய இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். அந்த இருசக்கர வாகனத்தில் (Press) பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அங்கிருந்து கார் கிளம்பியதும் காரில் இருந்தவர் மீது ஏற்பட்ட சிறிது சந்தேகத்தினால் ஆய்வாளர் தென்சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு செல்போனில் தொடர்புகொண்டு கார் பதிவு எண்ணை குறிப்பிட்டு உங்களுடைய பாஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். அது நீங்கள் கொடுத்ததுதானா என்று கேட்டதற்கு நான் அப்படி யாருக்கும் வழங்கவில்லை என கூறியுள்ளார்.

ஆய்வாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றிவிட்டு சென்ற இளைஞரின் கார் பதிவு எண்ணை வைத்து, சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் உள்ள அவரது வீடு தேடி சென்று விசாரணைக்காக பள்ளிகாரணை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ஷாம் கண்ணன்(27) என்பதும் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

போலீயாக தி.மு.க எம்.பியின் பாஸ்ஸை ராஜகோபாலன் என்பவரிடம் இருந்து வாங்கியதாகவும், காரில் இருந்த பெண் தனது பெண் தோழி என்றும் ஊரடங்கு காலம் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் இதுபோன்று போலியான ஸ்டிக்கர் தயாரித்து காரில் ஒட்டி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த 10 தேதி கைதான ஷாம் கண்ணனை பள்ளிகாரணை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் 24 மணி நேரத்தில் சிறையில் அடைக்காமல் சட்ட விதிகளை மீறி 2 நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து 3வது நாளில் கைதானவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோன்று ஆளும்கட்சி எம்பியின் அனுமதியில்லாமல் போலீயாக பாஸ் எப்படி தயாரிக்கப்பட்டது  ?  இதில் தொடர்புடைய நபர்கள் யார் யார்  ? பாஸ் வழங்கிய ராஜகோபாலன் யார் என்று பள்ளிகரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர்: வினோத் கண்ணன்
Published by:Karthick S
First published: