Vandalur Zoo | சிங்கங்களுக்கு கொரோனா.. வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகாரிகள் ஆய்வு..
Vandalur Zoo | சிங்கங்களுக்கு கொரோனா.. வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகாரிகள் ஆய்வு..
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பல்வேறு வனவிலங்கு காப்பகங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கும் தடுப்பூசி செலுத்த கோரிக்கை வலுத்துள்ளது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 11 சிங்கங்களின் ரத்த மற்றும் சளி மாதிரிகள் அண்மையில் போபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியானது. இதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கடந்த 3ம் தேதி உயிரிழந்தது.
மற்ற 8 சிங்கங்களின் உடல்நிலையை கால்நடை மருத்துவர்களும், பூங்கா ஊழியர்களும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8-ல் அதிக வயதான இரு சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் முன்னேற்றம் காணப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. முழு உடல் கவச உடையணிந்து வனத்துறை மூத்த அதிகாரி யுவராஜ் சிங்கங்கள் மற்றும் வன விலங்குகளை நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில் சிங்கங்களுக்கு இறைச்சி அளிப்போர் மூலமாக கொரோனா பரவியிருக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மனிதர்களைப்போல வன விலங்குகளுக்கும், கோயிலில் வளரும் யானைகளுக்கும் தடுப்பூசி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த முகாமில் 27 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. முகாமில் யானை பாகன்கள், உதவியாளர்கள், முகாமில் உள்ள வனத்துறையினர் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் யானைகள் மற்றும் வன விலங்குகளுக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஊழியர்கள், கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருப்பூரில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கும் கொரோனா வந்திருக்குமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. தெருநாய்களுக்கு மூச்சிரைப்பு இருந்ததாலும் அடுத்தடுத்து உயிரிழந்ததாலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.