முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் - திருமண விழாவில் முதலமைச்சர் பேச்சு!

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் - திருமண விழாவில் முதலமைச்சர் பேச்சு!

திருமண நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின்

திருமண நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தை நம்பர் ஒன்னாக மாற்றுவதையே இலக்காக கொண்டு பணியாற்றி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று திருமண நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு. கழக தலைமை நிலையச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகன் இல்லத் திருமண விழாவை, தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மணமக்கள் அருணா - அசோக் சக்கரவர்த்தி தம்பதியினரை முதலமைச்சர் வாழ்த்தி பேசினார். அப்போது பேசிய அவர்,  அரசின் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி இந்த திருமணம் நடந்திருப்பதற்கு பாராட்டுகள். பூச்சி முருகனின் தந்தை சிவசூரியன் அவர்களின் திருமணத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்துள்ளார். கலைஞர் அவர்கள் முன்னிலை ஏற்று இருக்கிறார்.

திமுகவின் நாடக பிரச்சார குழுவில் ஈடுபாட்டோடு இருந்தார் சிவசூரியன். அவரோடு எனக்கு எப்படி தொடர்பு என்றால், "நானே அறிவாளி" என ஒரு நாடகம். அதில் ஆட்சிக்கு வரும் முன், கலைஞர் அவர்கள் நடித்து வந்தார். பின்னர், அதில் சிவசூரியன் உடன் இணைத்து பல்வேறு நடிகர்கள் நடித்து வந்தனர். அதில் நாரதர் வேடம் உண்டு. அதில் அண்ணாவின் நண்பர் சி.வி. ராஜகோபால் அவர்கள் நடித்து வந்தார். தமிழகம் முழுவதும் அந்த நாடகம் நடைபெற்று வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராஜகோபால் அவர்களால் நடிக்க முடியவில்லை. எனவே அந்த நாரதர் வேடத்தில் நான் நடித்தேன். அந்த வகையில் பூச்சி முருகனை எனக்கு தெரிவதற்கு முன்பே அவரது தந்தையோடு நாடகத்தில் நடித்துள்ளேன். பொதுச் செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டதை போல தலைமைக் கழகத்தில் பூச்சி முருகன் ஆற்றி வரும் பணி பாராட்டுக்கு உரியது.

பீட்டர் அல்போன்ஸ்  அவர்கள் குறிப்பிட்டதை போல, இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற நிலையில், தமிழகத்தை நம்பர் ஒன்னாக மாற்றுவதே நம்முடைய இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறேன். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி  வருகிறீர்கள்.

இந்த நேரத்தில் வீட்டுவசதி வாரியத் தலைவராக பொறுப்பேற்க உள்ள பூச்சி முருகன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மணமகளாக உள்ள அவருடைய மகள், விரைவில் ஐ.ஏ.எஸ் தேர்தலில் வெற்றி பெற்று பணியாற்ற உள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள்.

இந்த திருமணம் சுயமரியாதை திருமணமாக நடந்துள்ளது. இதுபோன்ற சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான்.

பூச்சி முருகன் அவர்களை, பலரும் பூச்சி என அழைத்தாலும் நான் முருகன் என்றே அழைப்பேன். ஏனென்றால் முருகன் மீது நமக்கு அன்பு உண்டு பாசம் உண்டு. அது துரைமுருகன் அவர்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

Also read... கொரோனா தொற்று குறைந்தால் வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது: அமைச்சர் மா.சு!

மணமக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், வரும் காலத்தில் உங்களுடைய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள். என்னை பார்த்து நீங்கள் கேட்கலாம், உங்கள் பெயர் தமிழில் இல்லையே என. ஆனால் என்னுடைய பெயர் காரணப் பெயர். பல இடங்களில் அதுகுறித்து விளக்கி உள்ளேன்.

மணமக்கள் பாரதிதாசன் கூற்றுப்படி, வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டர்களாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்" என முதலமைச்சர் கூறியுள்ளார்.

First published:

Tags: MK Stalin