சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியை பிப்ரவரி 16-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
புத்தகக் கண்காட்சிக்கான செய்தியாளர் சந்திப்பு நந்தனத்தில் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய பபாசி செயலாளர் முருகன், "தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி பிப்.16 முதல் மார்ச் 6 வரை 19 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
ஜனவரியில் நடைபெற வேண்டிய புத்தகக் கண்காட்சி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் , பதிப்பாளர்களின் சிரமங்களை முதலமைச்சரிடம் கூறிய பிறகு மருத்துவத்துறையினரிமும் கலந்தாலோசித்து பேரிடர் மேலாண்மை விதிகளை பின்பற்றி கண்காட்சி நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பிப்ரவரி 16 ல் முதல்வர் புத்தக கண்காட்சியை திறந்து வைக்க இசைவு தெரிவித்துள்ளார். 3 லட்சம் சதுர அடி பரப்பளவில், 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 800 பதிப்பகங்கள் பங்கேற்க உள்ளன. ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.
தேர்தல் நாள் தவிர பிற நாட்களில் வாசகர்கள் அதிகம் வருவர். 2021ல் பின்பற்றப்பட்ட கொரோனா பாதுகாப்பு செயல்முறையே தற்போதும் பின்பற்றப்படும்.
புத்தகங்களுக்கு குறைந்தபட்சம் 10 விழுக்காடு தள்ளுபடி , ' அறுசுவை அரசு ' எனும் குறைந்த விலையிலான தரமான உணவகம் அரங்கில் திறக்கப்பட உள்ளது.
நாளை முதல் bapasi. Com மூலம் ஆன்லைன் முறையில் புத்தக கண்காட்சிக்கான டிக்கெட் பெறலாம். அனைத்து நாளும் காலை 11 மணி முதல இரவு 8 மணி மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். தொல்லியல் துறை சார்பில் 5 ஆயிரம் சதுர அடியில் தமிழர் பண்பாடு தொடர்பான அரங்கு அமைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மொத்தம் 10 லட்சம் பேர் வருகை தந்தனர். இந்த ஆண்டு சென்னை பகுதி கல்வி நிறுவனங்களில் பயிலும் 10 லட்சம் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு 6 முதல் 8 , 9- 10 , 11-12 வகுப்புகளுக்கு தனித்தனியாகவும் , கல்லூரி மாணவர்களுக்கு தனியாகவும் நடைபெறும்.
பேச்சுப்போட்டியில் முதலிடம் பெறும் வெளிநாட்டு மாணவருக்கு 100 டாலர் வரை பரிசு வழங்க முடிவு செய்துள்ளோம். ஓவியப் போட்டியும் நடைபெற உள்ளது.
புத்தக கண்காட்சியில், புத்தகம் வாங்கி வாசித்து அந்த புத்தகம் பற்றி 2 நிமிடம் சிறப்பாக பேசும் மாணவர் ஒருவருக்கும் பரிசு வழங்கப்படும். சிறந்த பேச்சாளராக தேர்வாகும் மாணவருக்கு மேடையில் பேச வாய்ப்பு வழங்குகிறோம்.
Also read... 'ஜெய்பீம் படத்தால் நாங்கள் கௌரவிக்கப்படுகிறோம்' - முதல் முறையாக நரிக்குறவர் பெண் வேட்பு மனுதாக்கல்!
கருணாநிதியின் 1 கோடி நிதியில் ஆண்டுக்கு 6 பேருக்கு கலைஞர் பொற்கிளி விருது வழங்கப்படுகிறது. முதல்வர் இந்த ஆண்டு தொடக்க நாளில் 6 பேருக்கு விருது வழங்க உள்ளார். அரங்கினுள் தனி நபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முடிந்தளவு முறையாக பின்பற்றுவோம்.
குழந்தைகளுக்கான நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரங்கம் ஒன்று மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட உள்ளது " என்றும் கூறினார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.