ஜார்ஜ் கோட்டையில் முதன் முறையாக தேசியக் கொடியேற்றும் முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின்

 • Share this:
  சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

  கொரோனா கட்டுப்பாடுகளால் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 8.45 மணியளவில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்கிறார். இதையடுத்து காவல்துறையினரின் மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொள்ள உள்ளார். அதன்பின் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக மூவர்ண கொடியை ஏற்றி வைத்து தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரையாற்ற உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன்பின்னர் காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ள 75-வது சுதந்திர தின நினைவுத் தூணை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். சுதந்திர தின விழாவையொட்டி, கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமை செயலகத்தில் தேசிய கொடியின் மூவர்ணத்தில் வண்ண விளக்குகளால் செய்யப்பட்டுள்ள அலங்காரம் காண்போரை கவரும் வகையில் உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, விமான நிலையம் உள்ளிட்ட இடங்களும் மூவர்ணங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

  இதையும் படிக்க: தமிழ்நாடும் இந்தியத் திருநாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ் பெற்றிடப் பாடுபடுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


   சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர தமிழகம் முழுவதும் முக்கிய சுற்றுலா தலங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், அணு மின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


  நெல்லை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் மோப்ப நாய் செல்வி மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயிலில் வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் பார்சல் அலுவலகத்தில் வரும் பார்சல்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் சோதனை செய்தனர். மேலும், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என ஏமாற்ற மாட்டேன்: மு.க.ஸ்டாலின்


  இதனிடையே, 75வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகம் இன்றைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நெஞ்சத்திலும் குடி கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு ஜனநாயகக் காற்றை சுவாசிக்க கிடைத்த இந்த சுதந்திரம் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அரியதொரு கருவூலம் என்றும் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடும், இந்திய திருநாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ்பெற்றிட பாடுபடுவோம் என்று 75வது சுதந்திர தின நாளில் சபதமேற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இதேபோன்று புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலை காந்தி திடலில் தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதையொட்டி, கடற்கரை சாலை, பேருந்து நிலையம் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தில் பயணிகளின் உடமைகள் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

   
  Published by:Murugesh M
  First published: