• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • வட சென்னை மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நேரில் ஆய்வு

வட சென்னை மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நேரில் ஆய்வு

மு.க.ஸ்டாலின் ஆய்வு

மு.க.ஸ்டாலின் ஆய்வு

கனமழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.

 • Share this:
  சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்த நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக வட சென்னையில் உள்ள  துறைமுகம், ஆர்.கே.நகரில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யும் முதலமைச்சர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்கிறார்.

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னையில் உள்ள கொளத்தூர், செல்வி நகர், சீனிவாசா நகர், பெரம்பூர், பெருமாள்பேட்டை, வல்லம் பங்காரு தெரு, புரசைவாக்கம், மூக்கு செட்டி தெரு, கொசப்பேட்டை, ஓட்டேரி, கொன்னூர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளை நேற்று காலை ஆய்வுசெய்தார். வழக்கமாக வரும் தனது காரில் செல்லாமல் மகேந்திரா ஜீப்பில் வந்தார். மழைநீர் தேங்கிய சாலைகளில் நடந்து சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டார்.

  பாடி பகுதிக்குச் சென்ற முதலமைச்சர், அங்கு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பால், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். வில்லிவாக்கம் வள்ளுவர் நகர் மற்றும் கொளத்தூர் ராஜமங்கலம் பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வுசெய்தார்.

  பின்னர் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மழை வெள்ளம் குறித்த தகவல் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால், தண்ணீர் தேங்கியதாகவும், 500 இடங்களில் பம்ப்கள் மூலம் நீர் வெளியேற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார். 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 44 மையங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்படுவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

  செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளை அதிகாரிகள் 24 மணி நேரமும் காண்காணித்து வருவதாகவும், தேவைக்கு ஏற்ப உபரி நீர் திறந்துவிடப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார். கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கூறினார்.

  அதனைத் தொடர்ந்து, தென்சென்னைக்கு உட்பட்ட சைதை ஆட்டுத்தொட்டி மேம்பாலத்தை முதலமைச்சர் பார்வையிட்டார். வேளச்சேரியில் ஏரியையும், பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வுசெய்தார். மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

  இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இன்னல்களை போக்கி, தேவையான உதவிகளை உடனடியாக நிறைவேற்ற தீவிரமாக செயல்பட வேண்டும் என்று திமுக எம்.பி, எல்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தான் நேரில் பார்வையிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

  கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுபாப்பான இடத்தில் தங்க வைத்தல், தேங்கிய தண்ணீரை வெளியேற்றுதல் போன்ற பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுடன் இணைந்து திமுகவின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

  இந்நிலையில், கனமழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்தின் மாநில பேரிடர் நிதியானது கொரோனா நிவாரணப் பணிகளுக்கும், பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  Must Read : School Holiday | தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

  வெள்ள பாதிப்புக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: