சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கன
மழை பெய்து வருகிறது. அதனால், பலபகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் சென்னையில் இடைவெளியில்லாமல் தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அனைத்து போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று காலை அலுவலகம் செல்வோர் மிகுந்த சிரமமடைந்தனர். கனமழை காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ஒரு ரயிலில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முண்டியடித்துக்கொண்டு ஏறிச்செல்லும் அவலம் ஏற்பட்டது. நீண்ட நேர தாமதத்திற்கு பிறகு ரயில் இயக்கப்பட்டதால், இதுபோல் மக்கள் கூட்டமாக ஒரே ரயிலில் ஏறிச்சென்றனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் போன்ற பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. ஆவடி இரயில் நிலைய தண்டவாளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதனால் புறநகர் ரயில் விரைவு இரயில் பாதையில் மாற்றிவிடுவதால் இரயில் போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதமாக செல்கிறது. மேலும் தண்டவாளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற ஜேசிபி இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் ஆவடி காவல் நிலைய வளாகத்தில் சுமார் 3 அடி அளவிற்கு மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளதால் போலீசார் பணியும் முடங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாது திருமலைராஜபுரம் பகுதியில் சுமார் 5 அடி அளவிற்கு நீர் சூழ்ந்துள்ளதால் இந்த காவல் நிலையம் முற்றிலுமாக நீரால் மூழ்கியுள்ளது. அதேபோல் ரயில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் தற்போது ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.