சென்னையை அடுத்த தாம்பரம் அருகே கடனுக்கு மளிகை பொருட்கள் தர மறுத்த கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பெரியாா் நகரைச் சேர்ந்தவர் விஜயராகவன் (வயது-30) இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் பெண் ஒருவர், விஜயராகவனின் கடைக்கு வந்து,மளிகை பொருட்களை கடனுக்கு கேட்டுள்ளார்.
அதற்கு ஏற்கனவே 4,500 ரூபாய் கடன் பாக்கி இருப்பதால் அதை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கி செல்லுமாறு தெரிவித்த விஜயராகவன் கடன் கொடுக்கவும் மறுத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய அப்பெண் தன் கணவரான மதன் (35) என்பவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே கடைக்கு சென்ற மதன் கடன் கொடுக்க மறுத்தது குறித்து, விஜயராகவனிடம் கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மதன் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து சென்று விஜயராகவனை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் விஜயராகவனின் கையில் நரம்பு அறுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறியது. உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் ஒடி வரவே மதன் அங்கிருந்து தப்பி ஓடினார். விஜயராகவன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மதனை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: சுரேஷ்
இதையும் படிங்க: சிறுவன் பலி எதிரொலி: துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல்- தமிழக அரசு
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.