ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழைக்கோட்டு போட்டோ ஷூட் வேண்டாம் முதல்வரே.. ஆதரவு கரம் நீட்டுங்கள் – கிருஷ்ணசாமி வேண்டுகோள்

மழைக்கோட்டு போட்டோ ஷூட் வேண்டாம் முதல்வரே.. ஆதரவு கரம் நீட்டுங்கள் – கிருஷ்ணசாமி வேண்டுகோள்

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

வெள்ள பாதிப்புகளை வீதிக்கு சென்று தான் ஆராய வேண்டும் என்பதல்ல, ஹெலிகாப்டரில் சென்று கூட ஒரே நாளில் ஆராய்ந்து விட முடியும்.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், வாக்குறுதிப்படி ஆறு ஓடுகிறது. அது பாலாறும் தேனாறுமாக அல்ல. சென்னையில் உள்ள சாலைகளே ஆறாகி ஓடுகின்றன என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

  சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஐந்து தினங்களாக பெய்யும் தொடர் மழையால் சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. போக்குவரத்தின் முக்கிய கேந்திரங்களாக விளங்கிய 15க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு விட்டன.

  வட சென்னை, கொளத்தூர், தி. நகர், மாம்பலம், வடபழனி, வேளச்சேரி, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான சாலைகளில் எவ்வித போக்குவரத்தும் இயக்க முடியாத நிலையும், பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் வீட்டுக்குள் வாழ முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இது மிக மிக அசாதாரணமான சூழல். மேடான பகுதிகளில் சில மின் மோட்டார்களை இயக்கி தண்ணீரை வெளியேற்றுவதால் மட்டும் சென்னை மக்களின் அவலநிலையைத் தீர்த்துவிட முடியாது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புகள் தாழ்வான பகுதிகளில் தான் மிக அதிகமாக இருக்கும்.

  Also Read:  மின் கட்டணம் செலுத்த 15 நாள் அவகாசம்.. 4 மாவட்ட மக்களுக்கு சலுகை - செந்தில் பாலாஜி அறிவிப்பு

  1967-லிருந்த ஏறக்குறைய 54 வருடம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த திராவிட கட்சிகளினுடைய ஆட்சியின் அலங்கோலம் தான் இன்று சென்னை வெளிக்காட்டும் வெள்ள அடையாளமாகும். தலைநகரில் ஆட்சியில் அமர்ந்து கொண்டு சில மேம்பாலங்களை மட்டுமே கட்டி, அதை மட்டுமே பொதுமக்களுக்குக் காட்டி ஓட்டுக்களை வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்திருக்கிறார்கள். சென்னை மாநகரம் 1947-க்கு பிறகு வேகமாக நகர் மயமாகி உள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சென்னையை வாழ்விடமாகக் கொண்டுள்ளனர்.

  Also Read: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீடிக்கிறது! வானிலை தகவல்

  சென்னை தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல, ஆங்கிலேயர்களும், டச்சுக்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும், போர்ச்சுக்கல்காரர்களும் இந்தியாவில் காலடி வைத்த நாள் முதல் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகத் திகழ்கிறது. இது தமிழகத்தின் தலைநகர் என்பதையும் தாண்டி, உலக அளவிலும் எளிதாக அடையாளப்படுத்தக்கூடிய ஒரு நகரமாகும். ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை பெருநகரம் நான்கு நாள் மழையைக் கூட தாக்குப் பிடிக்காத அளவிற்கு தத்தளிக்கிறது எனில் இந்த அவலநிலைக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் திராவிட கட்சிகள் மட்டுமே. அதிலும் கூடுதலாகப் பொறுப்பேற்க வேண்டியது ’திராவிட ஸ்டாக்கிஸ்டு’ பெருமை பேசும் இன்றைய ஆட்சியாளர்களே!.

  சென்னை மாநகரத்தின் கட்டமைப்பு வசதிகளைச் சர்வதேச அளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் 2006-2011 வரையிலும் அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியிலிருந்தபோது நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 13,000 கோடி ரூபாய் சென்னை நகருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த 13,000 கோடி ரூபாயை அன்றைய திமுக அரசு என்ன செய்தது? அதன் மூலம் எந்தந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல 2011-க்கு பிறகு 2021 வரை ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை எடப்பாடி அரசு என்ன செய்தது? என்பதும் தெரியவில்லை.

  Also Read:  கல்லறை தோட்டத்தில் மீட்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், வாக்குறுதிப்படி ஆறு ஓடுகிறது. அது பாலாறும் தேனாறுமாக அல்ல. சென்னையில் உள்ள சாலைகளே ஆறாகி ஓடுகின்றன. தொடர் மழையின் காரணமாகச் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது; வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்பது உலகிற்கே தெரியும். அதை வீதி வீதியாகச் சென்று ஆய்வு செய்துதான் தெரிய வேண்டும் என்பதில்லை.

  Also Read: சென்னையில் இயல்பைவிட கூடுதலாக 77% மழை பதிவாகியுள்ளது - வானிலை ஆய்வு மையம்

  திமுகவுக்கே உரித்தான, உடன்பிறந்த விளம்பரம் மோகத்தை தீர்க்கவும், விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் வாக்குகளை அள்ளிக் கொள்வதற்காகவுமே மக்கள் வெள்ள நேரத்தில் அல்லல் படும் போது மழைக் கோட்டு போட்டுக் கொண்டு போட்டோ சூட்டிங் நடத்தியதையும், போட்டோஷாப் செய்ததையும் மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டுவதற்கு உதவிகரமாக இருக்குமே தவிர, மேலே மழை கொட்டுகிறது; வீட்டுக்குள்ளே வெள்ளம் புகுகிறது; எங்குச் செல்வது? என்ன செய்வது? எனத் தத்தளிக்கும் மக்களுக்கு அது உதவாது.

  சென்னை மக்களின் இந்த அவல நிலைக்கு ”திராவிட ஸ்டாக்கிஸ்ட்’ ஸ்டாலின் அரசு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆறு மாதத்திற்கு முன்பு ஆட்சிக்கு வந்து விட்டீர்கள். கடும் மழை வரும் என்று வானிலை மையம் கூறிவிட்டது. நீங்கள் மேயராக இருந்த போதும் சரி, துணை முதல்வராக இருந்த காலத்திலும் சரி எதையுமே செய்யவில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதுவரை செயல்படாவிடினும், இப்பொழுதாவது செயல்படுங்கள்.உடனடியாக,

  உணவுக்கும் உடைக்கும் அல்லல் படக்கூடிய லட்சக்கணக்கான சென்னை வாழ் மக்களுக்கு முதலில் பாதுகாப்பான இடங்களில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். முகாம்களில் தங்கும் அனைவருக்கும் சுகாதாரமான உணவு, குடிநீர், உடை, படுக்கை வசதிகள், போர்வைகள்; குழந்தைகளுக்கு பால், பால் பவுடர்கள், கொசு வலைகள் உள்ளிட்ட அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  திரைப்படத்தில் கூட ஒரே காட்சியை மக்கள் திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புவதில்லை. வெள்ளத்தில் நடப்பதுபோல் போட்டோசூட் காட்சிகள் மக்கள் மனதில் வெறுப்பை தான் உண்டாகும்.  ”திருமண வீடானாலும் முதல் மாலை, மரண வீடு ஆனாலும் முதல் மாலை வேண்டும்” என்பதற்கு இணங்க இந்த வெள்ள காலத்திலும் மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளில் செயல்படாமல் வெறும் விளம்பர பணிகளில் ஈடுபடுவது உகந்ததும், சரியானதும் அல்ல. அது வெறுப்பையும் அருவருப்பையும் தான் உண்டாக்கும். விளம்பர மோகத்தை முற்றாக விட்டுவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து என்ன செய்ய வேண்டுமோ, அந்த பணிகளான மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் நீங்களும், உங்கள் சாகாக்களும், அரசு இயந்திரங்களையும் ஈடுபடுத்துங்கள்.

  வெள்ள பாதிப்புகளை வீதிக்கு சென்று தான் ஆராய வேண்டும் என்பதல்ல, ஹெலிகாப்டரில் சென்று கூட ஒரே நாளில் ஆராய்ந்து விட முடியும். இப்போது தேவைப்படுவது வெள்ளம் வீட்டிற்குள் புகுந்த மக்களுக்கு மாற்று இடமும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து சென்னைவாசி மக்களுக்கு உணவு, உடை, படுக்கை வசதிகள், போர்வைகள்; குழந்தைகளுக்கு சுகாதாரமான குடிநீர், பால், பால் பவுடர்கள், கொசு வலைகள் உள்ளிட்டவற்றை அனைத்து நிவாரண பொருட்களும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு"அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chennai rains, DMK, Doctor krishnaswamy, Flood, Flood alert, Heavy rain, Tamilnadu