வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சென்னையில் நள்ளிரவில் இருந்து கொட்டித்தீர்க்கும் கனமழையின் காரணமாக நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காடுதாங்கல், கே.கே.நகர், வேளச்சேரி, வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னை திநகர் பகுதியில் சாலையில் அதிகப்படியான தண்ணீர் ஓடிகிறது. வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சென்னை மக்களின் நீர் ஆதாரங்களான பூண்டி, புழல் ஏரி, செம்பரம்பாக்கம் எரிமற்றும் சோழவரம் ஆகிய நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கத் துவங்கி உள்ளது எனவே பொதுப்பணித்துறையினர் கூடுதலாக மதகுகள் வழியாக உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர் . இதன்காரணமாக கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் அணிவகுத்து நிற்கின்றனர். 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் போன்ற நிகழாமல் இருக்க கார் உரிமையாளர்கள் தங்களது. வாகனங்களை வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்திவைத்துள்ளனர். மழையின் காரணமாக தண்டவாளத்தில் நீர் தேங்கியிருப்பதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் கார்கள்
எழும்பூர் ரயில் நிலையம் முதல் சென்னை கடற்கரை சாலை ரயில் நிலையம் வரை தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசென்னை, வில்லிவாக்கம், தி.நகர் பகுதிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சுரங்கப்பாதையில் சிக்கிய அரசுப்பேருந்து
சென்னை காவல்துறையின் ஆயுதப்படை காவலர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி சுரங்கப்பாதையில் அரசுப்பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டது. அதனை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளச்சேதங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.