Home /News /tamil-nadu /

சென்னை மழையில் நிர்கதியாய் நிற்கும் நடைபாதை மனிதர்கள்.. வீடும் இல்லை.. தங்க இடமும் இல்லை

சென்னை மழையில் நிர்கதியாய் நிற்கும் நடைபாதை மனிதர்கள்.. வீடும் இல்லை.. தங்க இடமும் இல்லை

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்

வடசென்னை பகுதிகளில் ஏராளமான இடங்களில் சாலையோரங்களில் மக்கள் டெண்ட் போட்டு வசித்துக்கொண்டிருப்பார்கள். இந்த மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் எல்லாம் சொல்லில் அடங்காது.

  மழையில் அழுகிறேன் கண்ணீர் துளிகள் தெரியக்கூடாது என்று.. எங்கோ படித்த இந்த வரிகளை சென்னை மழை மீண்டும் ஞாபகப்படுத்தியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. #Chennairains என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. சென்னையில் கொட்டித் தீர்த்த மழையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  சுரங்கப்பாதையில் தத்தளித்த அரசுப்பேருந்து.. வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசைக் கட்டி நின்ற கார்கள்.. தண்ணீரில் பாயும் டூவிலர்கள்.. கூவம் ஆற்றில் கரைப்புரண்டு ஓடிய தண்ணீர்.. செம்பரம்பாக்கத்தில் திறந்த உபரி நீரால் சாலையில் துள்ளிக் குதிக்கும் மீன்கள்.. கொட்டும் மழையிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் சியர்ஸ் சொல்லிக் கிளாஸை பரிமாறும் குடிமகன்கள்.. சென்னை மழையை லேக் வீயூ அப்பார்ட்மெண்ட்களில் இருந்து புகைப்படம் எடுத்து மழை.. ராஜா சாங்ஸ்.. வித் காபி.. எனப் பதிவிட்ட நெட்டிசன்கள்.. சுரங்கப்பாதையில் சூழ்ந்த தண்ணீரில் சாகசம் செய்யும் இளைஞர்களின் வீடியோ என இன்னும் இப்படி சில..

  சென்னை மழை


  வடசென்னை பக்கம் திரும்பும் போது முதல் வரியை மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெருநகரமான சென்னையை இரவில் சுற்றிப்பார்த்ததுண்டா.. சென்னையின் தினசரி பரபரப்புகள் அடங்கிய பின்னர் நடைபாதைகளில் தற்காலிக குடியிருப்புகள் அமையும். நமக்கு அது வெறும் நடைபாதை, வீடே இல்லாத மக்களுக்கு அந்த நடைபாதைதான் குடியிருப்பு. சாலையோர பிளாட்பாரங்களில் மக்கள் பச்சிளம் குழந்தைகளுடனும் வயதுமுதிர்ந்தவர்களுடனும் தங்கியிருப்பார்கள்.

  வடசென்னை பகுதிகளில் ஏராளமான இடங்களில் சாலையோரங்களில் மக்கள் டெண்ட் போட்டு வசித்துக்கொண்டிருப்பார்கள். இந்த டெண்ட்கள் எல்லாம் மழையில் முளைத்த காளாண்கள் போல் நள்ளிரவில் முளைத்து காலையில் மாயமாகிவிடும். அந்த மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் எல்லாம் சொல்லில் அடங்காது. அரசு கட்டிக்கொடுத்துள்ள பொதுக்கழிப்பறைகளைத் தான் பயன்படுத்த முடியும். இப்போது கொட்டும் மழையில் வீடுகளை இழந்து வீதிகளில் நிற்கின்றனர் இந்த மக்கள். இந்த குடியிருப்புகள் எல்லாம் மழை வெள்ளத்தில் காணாமல் போனது. உறவினர்களின் இல்லங்கள், முகாம்களில் சிலர் தஞ்சமடைந்துள்ளனர்.

  சாலையோர குடியிருப்புகள்


  தொண்டு நிறுவனம் சார்பில் தெருவோர கிரிக்கெட் போட்டியில் விளையாடி அதில் கோப்பையையும் வென்று திரும்பிய வீராங்கணையின் வீடும் இந்த வெள்ளத்தில் காணாமல் போனது. மோனிஷா என்ற சிறுமி ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட் நிறுவனம் லண்டனில் நடந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர். சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் தான் இவர் வசித்து வருகிறார்.

  சென்னையில் கொட்டித்தீர்த்த மழையால் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இப்போது புளியந்தோப்பு பகுதியில் அந்த சிறுமி தனது உறவினரின் வீட்டில் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் சகோதரன் பேசுகையில் , “ சனிக்கிழமையில இருந்து நல்ல மழை. ஞாயிற்றுக்கிழமை காலையில பார்த்தா நாங்க தங்கியிருந்த இடம் எல்லாம் தண்ணீயா வந்துடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியல. அதனால புளியந்தோப்பு-ல இருக்க சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாரும் வந்துட்டோம். இங்கும் தண்ணியாத்தான் இருக்கு. எங்கயும் போக முடியல. எதுவும் வாங்கிட்டு வர முடியல. நாங்க முதல் மாடியில இருக்கிறதால தண்ணீர் இல்லை. கீழ்ப்பகுதியில் வெள்ள நீர் அப்படியே இருக்கு. சாப்பாடு இல்லாம இங்க இருக்கிற மக்கள் கஷ்டப்படுறாங்க. இங்க பக்கத்துல ஒரு வக்கீல் இருக்காரு அவருதான் தொண்டு நிறுவனங்கள் உதவியோட சாப்பாடு வழங்குகிறார்.

  சென்னை மழை


  எங்களுக்கு சொந்தக்காரங்க வீடு இருக்கிறதால இங்க வந்துட்டோம். ஆனா இன்னும் நிறைய மக்கள் அங்கத்தான் இருக்காங்க. வால்டாக்ஸ் ரோடுல நாங்க இருந்த இடம் எல்லம் ஒரே வெள்ளமா இருக்கு. இப்போ கொஞ்சம் தண்ணீர் வடிச்சிடுச்சுன்னு சொன்னாங்க. தண்ணில பாம்பு, பூராண் எல்லாம் வருது. அதனாலேயே நிறைய பேர் அங்கிருந்து வேற பக்கம் போயிட்டாங்க.என்ன பண்றதுன்னு தெரியல… என்றார் சோகத்தோடு.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chennai flood, Chennai rains, Food, Red Alert, Red alert withdraw, Tamilnadu news, Tamilnadu Red Alert

  அடுத்த செய்தி