சென்னையில் பெய்த கனமழையால் பட்டாளம் மற்றும் புளியந்தோப்பு பகுதிகள் ஒரு வாரமாக இருளில் மூழ்கியுள்ளன. உணவுக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் வெள்ள நீரில் செல்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, மண்டலமாக வலுப்பெற்று கரையை கடக்கும் வரை 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் புறநகரில் தாழ்வான பல பகுதிகள், வெள்ள நீரில் தத்தளித்தன. ஆனால், வெள்ளிக்கிழமை பெரும்பான்மையான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.
சூளை பட்டாளம் மற்றும் புளியந்தோப்பு பகுதிகளில் 3 கிலோ மீட்டர் பரப்பளவில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் தனித் தீவுபோல் காட்சியளிக்கின்றன. இதில், தரை தளத்தில் உள்ள வீடுகள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.ஃபிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலும், கடந்த 6 நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பட்டாளம் மற்றும் புளியந்தோப்பின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
Also Read: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்.. 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.வெள்ளம் சூழ்ந்து பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் உணவு கூட சமைக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், ஒரு கிலோமீட்டர் தூரம் வெள்ள நீரிலே நடந்து சென்று, தன்னார்வலர்கள் வழங்கும் உணவுப் பொட்டலங்களை வாங்கி, தங்களுடைய பசியை போக்கி வருவதாக கூறுகின்றனர். மழைநீருடன், கழிவு நீரும் கலந்துள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் விவேக் நகர், எம்.என்.நகர் உள்ளிட்ட பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடியாமல் குளம் போல் காட்சியளிக்கிறது. நகரின் மற்ற பகுதிகளில் முக்கியமான சாலைகளில் மட்டும் மழைநீரை அப்புறப்படுத்திய மாநகராட்சி நிர்வாகம், குடியிருப்பு பகுதிகளை கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read: சென்னை மழையில் நிர்கதியாய் நிற்கும் நடைபாதை மனிதர்கள்.. வீடும் இல்லை.. தங்க இடமும் இல்லை
ஒவ்வொரு மழைக்காலத்திலும் நீர் தேங்கும் இடங்களை மாநகராட்சி மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தும் தொலைநோக்கு திட்டமிடல் இல்லாத காரணத்தால் அவலம் தொடர்வதாக வடசென்னைவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.