• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் காவல் ஆய்வாளர்: ஊரடங்கு முடிந்தும் தொடரும் மனிதநேயம்!

சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் காவல் ஆய்வாளர்: ஊரடங்கு முடிந்தும் தொடரும் மனிதநேயம்!

காவல் ஆய்வாளரின் மனித நேயம்

காவல் ஆய்வாளரின் மனித நேயம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 11 மணியிலிருந்து 12 மணி வரை சேப்பாக்கம் வழியாகச் செல்லும் அனைவரும் இந்த மனித நேய செயலை காணமுடியும். முதல் அலையில் தொடங்கிய அன்னமிடும் பணியை 2வது அலை முடிந்தும் சீத்தாராம் தொடர்ந்து வருகிறார்.,

  • Share this:
கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது, உணவில்லாமல் தவித்த சாலையோர மக்களுக்கு உணவிட்டு பழகிய காவல் ஆய்வாளர் ஒருவர் இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த பின்பும் அதை நிறுத்த மனமில்லாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாலையோரம் உள்ள மக்களுக்கு சுவையான சத்தான உணவுகளை வழங்குவதை தனது வாடிக்கையாக தொடர்ந்து வருகிறர்.

கொரோனா முதல் அலை ஊரடங்கானது கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் போடப்பட்டது. இந்த ஊரடங்கினால் கூலி வேலைக்குச் செல்லும் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். வேலைக்கு செல்ல முடியாமலும் போதிய வருமானம் கிடைக்காமலும் சாப்பிடுவதற்கு உணவில்லாமல் பெரிய அளவிலானஇன்னல்களை அவர்கள் சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில்தான் திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சீத்தாராம் என்பவர் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும், கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் ஒருநாள் உணவு ஏற்பாடு செய்து கொடுக்கலாம் என நினைத்து அதன்பேரில் அவர்களுக்கு ஒரு நாள் உணவு வழங்கினார்.

உணவில்லாமல் கஷ்டப்பட்ட மக்களின் சந்தோஷத்தை பார்த்த அவர், அதன் பிறகு உணவில்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு தொடர்ச்சியாகவே உணவு வழங்கலாம் என முடிவெடுத்து காவல்துறை பணியின்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் உணவகங்களில் உணவு வாங்கி வந்து சாலையோரங்களில் இருக்கும் மக்களுக்கு  உணவளித்து வருகிறார்.கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சாலையோர மக்களுக்கு உணவளித்து வரும் இவர் தற்போது சென்னை காவல்துறை குற்ற ஆவணகாப்பக ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தனது விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

இதற்காக தனக்கு தெரிந்த நண்பர் உணவகத்தில் பிரியாணி, சாப்பாடு, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என ஒவ்வொரு வாரமும் நல்ல தரத்துடன் உணவு தயார் செய்து அதனை அனைவரையும் ஒன்றாக அமரச்செய்து தட்டு மற்றும் இலைகள் வைத்து பரிமாறி வருவதை தனது வழக்கமாக கொண்டு வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை சரியாக 11.30 மணியானால் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரே உள்ள பிளாட்பார்மில் இவரது வருகைக்காக 50-க்கும் மேற்பட்ட சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் காத்திருக்கின்றனர்.ஆட்டோவில் உணவு மற்றும் அவர்களுக்காக தண்ணீர் எடுத்து வரும் காவல் ஆய்வாளர் சீத்தாராம் சாப்பிடக்கூடிய அந்த இடத்தை அவராகவே கூட்டி சுத்தம் செய்து அங்கு அனைவரையும் அமர செய்து அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறி சாப்பிட செய்கிறார். இந்த காட்சியை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 11 மணியிலிருந்து 12 மணி வரை சேப்பாக்கம் வழியாகச் செல்லும் அனைவரும் காணமுடியும்.

மேலும் படிங்க: யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார்? வீடியோ வெளியிட்டவரை கைது செய்யுங்க- சீமான்


தனது சொந்த பணத்தில் மட்டுமே சாலையோர மக்களுக்கு சுவையான தரமான உணவிட்டு வரும் காவல் ஆய்வாளர் சீத்தாராம், கொரோனா ஊரடங்கில் தான் முதன்முறையாக சாலையோர மக்களுக்கு உணவிட பழகியதாகவும், சாப்பிட்ட சென்ற மக்கள் சந்தோஷத்தில் நன்றி கூறியபோது உண்மையான சந்தோஷத்தை உணர்ந்ததாகவும், அதனால் இந்த சேவையை விடாமல் செய்ய வேண்டும் என்று எண்ணி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’முகக்கவசம் அணியுங்க’- விழிப்புணர்வு ஏற்படுத்திய லிட்டில் கிருஷ்ணர்கள்!


வரும் நாட்களில் அதிக அளவிலான மக்களுக்கு சுவையான, தரமான உணவு வழங்கவேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசை என மகிழ்ச்சியோடு கூறுகின்றார் சென்னை காவல்துறை குற்ற ஆவணகாப்பக காவல் ஆய்வாளர் சீத்தாராம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது சொந்தப் பணத்தில் சாலையோர மக்களுக்கு  உணவுகளை வழங்கி வரும் காவல் ஆய்வாளர் சீத்தாராமின் மனிதநேயம் போற்றுதற்குரியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: