• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • 500 கி.மீ. தூரத்துக்கு கடத்தப்பட்ட லாரி-1000 சிசிடிவி உதவியுடன் மீட்ட போலீசார்!

500 கி.மீ. தூரத்துக்கு கடத்தப்பட்ட லாரி-1000 சிசிடிவி உதவியுடன் மீட்ட போலீசார்!

மீட்கப்பட்ட லாரி

மீட்கப்பட்ட லாரி

காணாமல் போன லாரியை மீட்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்த போலீசார், இறுதியில் சென்னையில் கடத்தப்பட்ட லாரி திருப்பூரில் இருப்பதை கண்டு பிடித்தனர்.

 • Share this:
  சென்னை சோழிங்கநல்லூரில் திருடுபோன கழிவுநீர் லாரியை சுமார் 1000த்திற்கும் மேலான சிசிடிவி கேமரவை ஆராய்ந்து  தனிப்படை போலீசார் திருப்பூரில் மீட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து சென்றால் போலீசில் மட்டிக்கொள்வோம் என்தால் சுங்கச்சாடியை புறக்கணித்து கிரமங்களில் புகுந்து சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரியை கடத்தி சென்றுள்ளனர்.

  சென்னை சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் வசித்து வருபவர் பரசுராமன். தன்னுடைய மனைவி கவிதா பெயரில் கழிவுநீர் லாரி ஒன்றை  அவர் வைத்துள்ளார்.  வழக்கம்போல் கடந்த 8ம் தேதி இரவு லாரியை வீட்டின் வெளியே ஓஎம்ஆர் சாலையில் சர்வீஸ் சாலையில் விட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார்.

  மறுநாள் 9ம் தேதி காலை எழுந்தபின்பு வெளியே வந்ததும் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கழிவுநீர் லாரி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஒருவேலை பைனான்சியர் யாரேனும் எடுத்துள்ளனரா என்பது குறித்து விசாரித்தபோது அவர்களும் எடுக்கவில்லை என கூறியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பின்னர் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சீனிவாசனிடம் பரமசிவம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காணாமல் போனதாக கூறும் கழிவுநீர் லாரியை எடுத்து சென்றது பதிவாகி இருந்தது.

  பின்னர் இச்சம்பவம் குறித்து துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி அவர்களின் உத்தரவின்பேரில் செம்மஞ்சேரி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜமீஸ்பாபு, தலைமை காவலர்கள் புஷ்பராஜ், தாமோதரன், காவலர்கள் சிங்காரவேலன், வினோத், கண்ணன், பவித்ரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

  தனிப்படை போலீசார் தங்களது தேடுதல் வேட்டையில் இறங்கி சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து திருடப்பட்ட லாரி எந்த வழியாக சென்றது என்பதை கண்டறிய ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய துவங்கினர்.

  இதையும் படிங்க: கள்ளச் சந்தையில் மது விற்பதற்கு லஞ்சம்: வீடியோ வெளியான நிலையில் காவலர் சஸ்பெண்ட்


  சோழிங்கநல்லூரில் திருடப்பட்ட லாரிக்கு செம்மஞ்சேரியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டீசலை நிறப்பிக்கொண்டு ஓஎம்ஆர் வழியாக செங்கல்பட்டு மாவட்டத்தை நோக்கி நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளனர்.

  அதை தொடர்ந்து லாரி சென்ற வழியெங்கும் சிசிடிவி கேமாராவை ஆராய்ந்துகொண்ட சென்ற போலீசார் லாரி செங்கல்பட்டு மாவடத்தில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியை கடந்து சென்றதை கண்டறிந்தனர்.

  அதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியை சிசிடிவி கேமராவின் மூலம் பின் தொடர்ந்து மேல்மருவத்தூர், வந்தவாசி, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, அரூர், சேலம் ஆத்தூர் வரை தனிப்படை போலீசார் சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றே  இரவு பகல் பாராமல் 12 நாட்களாக   திருடுபோன லாரியை தேடி சென்றுள்ளனர்.

  ஒரு கட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்க முடியாத சூழலில் சேலத்திலிருந்து காரில் தங்கள் தேடுதல் வேட்டையை துவங்கிய தனிப்படையினர் ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, பவானி, பெருந்துறை, பெருமாநல்லூர் என கடைசியக திருப்பூர் மாவட்டத்தை அடைந்தனர்.

  திருப்பூர் மாவட்டம் சரலக்காடு என்ற ஒரு கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். லாரியின் முன்பகுதியில் வரைந்திருந்த பெயிண்டிங்கை மாற்றி பெயிண்ட் அடித்துள்ளதை கண்டனர். மேலும் வாகன பதிவு எண்ணையும் மாற்றி சம்மந்தமே இல்லாத பதிவு எண்ணை பொறுத்தியுள்ளதும் தெரியவந்தது.

  பின்னர் அங்கிருந்த திருடப்பட்ட கழிவுநீர் லாரியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தும், லாரியை திருடி சென்ற இருவரையும் கைது செய்து சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

  காவல் நிலையத்தில் வைத்து இருவரிடம் நடத்திய விசாரணையில் லாரியை திருடியவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 55 வயதான வேணுகோபால், அவருடைய தம்பி மகன் 25 வயதான தினேஷ்குமார் என்பது தெரியவந்தது.

  இருவர் மீதும் பண்ருட்டியில் 7 லாரிகள் திருடிய வழக்கும், தாம்பரத்தில் ஒரு லாரி திருடிய வழக்கும், போரூர் ஆட்டோவில் சென்று இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கும், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

  மேலும் படிக்க: குளியலறையில் வெப்கேமரா வைத்து பெண்கள் குளிப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் - தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்


  கடந்தமுறை தாம்பரத்தில் திருடிய லாரியை தேசிய நெடுஞ்சாலை வழியாக சுங்கச்சாவடிகளை கடந்து சென்றதால் போலீசார் சுலபமாக கைது செய்துவிட்டனர் என்பதால் இந்தமுறை போலீசாரிடம் சிக்காமலே இருக்க தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்காமல் செல்லவேண்டும் என்பதற்காக முன்னதாகவே திருப்பூர் செல்வதற்காக கிராமங்களில் செல்லும் வழிதடங்களை தெரிந்து கொண்டு பின்னர் திருடிய கழிவுநீர் லாரியை கிராமங்களின் வழியாக சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் கடத்தி சென்று தென்னந்தோப்பில் பதுக்கிவைத்திருந்துள்ளனர்.

  போலீசாரின் கவனத்தை திசை திருப்பவே திருப்பூரிலிருந்து சென்னை வந்து லாரிகளை திருடி செல்வதாகவும் விசாரணையில் தெரிவித்த லாரியை திருடியவர்கள், 12 நாட்களில் போலீசார் தங்களை பிடிப்பார்கள் என்று சிறிதளவும்  நினைக்கவில்லை என்றும் போலீசார் தங்களை எப்படி பிடித்தார்கள் என்பதை நினைத்து குழம்பிபோய் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

  போலீசார் தங்களை பின் தொடரகூடாது என்பதற்காக தான்  தேசிய நெடஞ்சாலையை புறக்கணித்து விட்டு கிராமங்களின் வழியாக லாரியை கடித்தி வந்தோம் என்றும் அவர்கள்  கூறியுள்ளனர்.

  பின்னர் வேணுகோபால், தினேஷ்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லாரியை திருடுவதற்காக பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும், திருடுபோன லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  காணாமல் போன தனது லாரியை போலீசார் கண்டுபிடித்தது குறித்து லாரி உரிமையாளர் பரசுராமிடம் கேட்டபோது, “வழக்கமாக வீட்டில் நிறுத்திவைத்திருந்த லாரியை காணவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எனது லாரியை கண்டுபிடித்து கொடுப்பார்கள் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. உண்மையாக போலீசார் கடுமையாக உழைத்துள்ளனர்.  இந்த லாரியை கண்டுபிடிக்க  பணியாற்றிய  ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து போலீசாருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

  சென்னையிலிருந்து திருப்பூர் வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆராய்ந்து காணாமல் போன லாரியை விரைந்து கண்டுபிடித்த செம்மஞ்சேரி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜமீஸ்பாபு, தலைமை காவலர்கள் புஷ்பராஜ், தாமோதரன், காவலர்கள் சிங்காரவேலன், வினோத், கண்ணன், பவித்ரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை குழுவினர்க்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.  

  செய்தியாளர்: வினோத் கண்ணன்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: