• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • சென்னை தொழிலதிபரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டல் - சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த காவல்துறை

சென்னை தொழிலதிபரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டல் - சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த காவல்துறை

Youtube Video

சென்னையில் பணத்திற்காக கத்திமுனையில் தொழிலதிபரை கடத்திய கும்பலை சினிமா பாணியில் போலிசார் விரட்டி மடக்கி பிடித்துள்ளனர்.  

 • Share this:
  சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் மூசா என்பவர் வசித்துவருகிறார். காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அவர் தொழிலதிபராக வலம் வருகிறார்.

  அரசால் ஏலம் விடப்படும் செம்மரக்கட்டைகளை விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழிலை மூசா செய்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஈசிஆர் சாலையில் உள்ள தனது மகன் பஷீர் வீட்டுக்கு சென்றுவிட்டு சேத்துப்பட்டுக்கு திரும்ப ஆயத்தமானார்.

  அப்போது, மூசாவிடம் ஏற்கனவே பணியாற்றிய குமார் என்கிற அருப்பு குமார் உட்பட 5 பேர் கொண்ட கும்பல், வீட்டு வாசல் வைத்து மூசாவை காரில் கடத்தியுள்ளனர். மூசா கடத்தப்பட்டதை அறிந்துகொண்ட குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காரை விரட்டிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

  துப்பாக்கி முனையில் மூசாவை கடத்திய கும்பல், போரூர் செட்டியார் அகரத்தில் உள்ள தனியார் பொது மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைத்தனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால், மூசா குடிபோதைக்கு அடிமையானவர் என்று சொல்லி கைவிலங்கு போட்டு அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  மூசாவின் செல்போன் மூலம் அவரது மகன் பஷீருக்கு போன் செய்த கடத்தல் கும்பல், உனது தந்தை உயிருடன் திரும்ப வேண்டுமானால், 5 கோடி ரூபாய்யை எடுத்துவா என கூறியுள்ளனர்.

  அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என மூசாவின் குடும்பத்தினர் கூற,..." உள்ளத்தை அள்ளித்தா" சினிமாவில் வரும் கடத்தல் காட்சியை போல் பேரம் பேசியுள்ளனர். மூன்று கோடி இரண்டு கோடி, ஒரு கோடி, 50 லட்சம் எனப் படிப்படியாக குறைத்து இறுதியாக 25 லட்சம் தருமாறு கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது.

  திங்களன்று பணத்தை எடுத்துக்கொண்டு தாம்பரம் அருகே வர கூறி போனை சுவிட்ச் ஆப் செய்ததுள்ளது அக்கும்பல். மூசாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், செல்போன் டவர் மூலம் மூசாவின் இருப்பிடத்தை மற்றொருபுறம் போலீசார் குறிவைத்து தேடியுள்ளனர்.

  செவ்வாயன்று, மீண்டும் மூசாவின் செல்போனில் இருந்து பேசிய கடத்தல் கும்பல், எழும்பூர் அருகே ரூ.25 லட்சத்துடன் வருமாறு மிரட்டியுள்ளனர். பிணைத்தொகையான 25 லட்சம் ரூபாய் பணத்துடன் போலீசாரும் மூசாவின் மகன் பஷீரும் எழும்பூர் அல்சா மால் அருகே தயாராக இருந்தனர்.

  அங்கு மூசா உடன் காரில் வந்த கடத்தல்காரர்கள் பணத்தை பெற முயற்சி செய்த போது மறைந்திருந்த போலீசார் எழும்பூர் கோ ஆப் டெக்ஸ் சிக்னல் அருகே சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்.  குமார் என்கிற அறுப்பு குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பிடிபட்டனர். உடன் வந்த மற்ற மூவரும் தப்பி ஓடிவிட்டனர்.

  பிடிபட்ட 2 கடத்தல்காரர்களை சேத்பட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்ததில் மூசா சந்தன மரம், செம்மரம் விற்பனை உள்ளிட்ட தொழில் செய்து வருவது தெரியவந்தது. அதிக லாபம் ஈட்டிய மூசாவை கடத்தினால், பணம் கிடைக்கும் என கருதி கடத்தலை அரங்கேற்றியதாக அவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

  அதுமட்டுமின்றி, மூசாவிடம் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த அறுப்பு குமார், தான் வேலை பார்த்ததற்கு மூசா முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என அதிருப்தியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

  கடத்தல் வழக்கில் சிக்காமல் தப்பியோடிய காந்தி, வினோத், மணி ஆகியோர் அறுப்பு குமார் ஜெயிலில் இருக்கும்போது நட்பானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

  சந்தனம், செம்மர விற்பனை மூலம் பணம் கொட்டுகிறது என்பதை அறிந்துகொண்ட ஊழியர்கள், உரிமையாளரையே கடத்தி சிக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: