Home /News /tamil-nadu /

''சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம்'' : நியூஸ் 18-க்கு மேயர் பிரியா ராஜன் பேட்டி

''சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம்'' : நியூஸ் 18-க்கு மேயர் பிரியா ராஜன் பேட்டி

சென்னை மேயர்

சென்னை மேயர்

Chennai Mayor Priya Rajan | எனது குடும்ப பின்னணி அரசியல் சார்ந்ததாக இருந்தாலும், நான் ஆசிரியையாக விரும்பினேன். நான் அரசியலுக்குள் வர வேண்டும் என்று யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை - மேயர் பிரியா ராஜன்.

சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் என்று மேயராக பொறுப்பேற்றிருக்கும் பிரியா ராஜன் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி 178 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுகவுக்கு 15, அமமுக, பாஜக தலா 1 வார்டிலும் சுயேட்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

தனிப்பெரும்பான்மையுடன் சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில், 74வது வார்டில் 28 வயதான பிரியா ராஜன் சென்னை மேயராக பொறுப்பேற்றுள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

முதலில் நான் மேயராக தேர்வு செய்யப்பட்டதாக எனக்கு தகவல் வந்தபோது என்னால் நம்ப முடியவில்லை. எனது தந்தைதான் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். மேயர் என்பது மிகப்பெரும் பொறுப்பு. என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படவேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.

எனது குடும்ப பின்னணி அரசியல் சார்ந்ததாக இருந்தாலும், நான் ஆசிரியையாக விரும்பினேன். நான் அரசியலுக்குள் வர வேண்டும் என்று யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் எனக்கு அரசியல் மீது ஆர்வம் உண்டு. மேயர் ஆவேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது.

இதையும் படிக்க - சென்னை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வானார் பிரியா..
 எனது கணவரைப் பொருத்தளவில், அரசியல், தேர்தல், பிரசாரம் எல்லாம் அவருக்கு புதியது. திருமணம் ஆகும் வரையில் அவர் அறிவாலயத்திற்கு வந்தது கிடையாது. அப்பா கட்சியில் இருப்பதால் நான் அறிவாலயத்திற்கு அடிக்கடி வந்துள்ளேன். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், கணவருடன் அறிவாலயத்திற்கு வந்தேன். எனது பணிகளுக்கு அவர் உறுதுணையாக இருக்கிறார்.


இதையும் படிக்க - வட சென்னை டூ ரிப்பன் மாளிகை - சென்னை மேயராகும் 28 வயது பிரியா..
முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு அளித்துள்ள பொறுப்பையும், மக்களின் தேவைகளையும் நான் உணர்ந்துள்ளேன். அரசியலில் எனக்கு கலைஞர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும்தான் வழிகாட்டிகள். சென்னையை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனைகளைப் பெற்று, எனது பணிகளை பொறுப்புடன் செய்து முடிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரியாவின் தந்தை பெரம்பூர் ஆர்.ராஜன் திமுக மூத்த நிர்வாகியாக திருவிக நகர் பகுதியில் இருந்து வருகிறார். முன்னாள் திமுக எம்எல்ஏ செங்கை சிவம் இவரது உறவினர் ஆவார்.

எம்.காம் பட்டதாரியான பிரியா, 18 வயதில் திமுகவில் இணைந்துள்ளார். சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் K. ராஜா என்பவரை பிரியா திருமணம் முடித்துள்ளார். சென்னையின் முதல் தலித் மேயராக பொறுப்பேற்றிருக்கும் பிரியாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவரது செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Chennai, Chennai Mayor, Priya Rajan

அடுத்த செய்தி