சென்னை ஐஐடியில் கடந்த 2017ம் ஆண்டு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வேதியியல் துறையில் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். அப்போது, உடன் படித்த மாணவர் ஒருவர் அப்பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி அதுகுறித்து தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மாணவி என்பதால், கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என்ற பயத்தில் மாணவியை அந்த மாணவரிடமிருந்து விலகி இருக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் துணிச்சலடைந்த அந்த மாணவர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி தனது நண்பர்களுக்கும் மாணவியை பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பேராசிரியர் எடமன பிரசாத்திடம் புகார் அளித்துள்ளார். அதற்கு மாணவியின் சாதியை குறிப்பிட்டு திட்டியதுடன், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் பேராசிரியர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஐஐடி கல்வி வளாகத்திலுள்ள உள்புகார் கமிட்டியில் மாணவி கடந்த 2020ம் ஆண்டு புகார் கொடுத்துள்ளார். முதல் கட்ட விசாரணையை முடித்த ஐஐடி நிர்வாகம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. அதில் மாணவி பாதிக்கப்பட்டதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 மாணவர்கள் உட்பட 8 பேர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை... கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. சம்பவம் குறித்து 2021 ஜுன் மாதம் மயிலாப்பூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இத்தனை புகார்கள் அளித்தும், புகாரில் உண்மை இருப்பதாக ஐஐடி உள் புகார் கமிட்டி இடைக்கால அறிக்கையில் தெரிவித்தும் முக்கிய குற்றவாளிகளான 3 பேரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர்கள் சுதந்திரமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உடனடியாக இந்த வழக்கை விசாரித்து சுதந்திரமாக சுற்றித்திரியும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வழி வகுக்க வேண்டும் என்றும் பெண்ணிற்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை மயிலாப்பூர் மகளிர் காவல்நிலையம் விசாரிக்கக் கூடாது என்றும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மாணவியின் புகார் மீது விசாரணை நடத்த அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்கப்பட்டதாகவும், சாதிப்பாகுபாடு எதுவும் நடக்கவில்லை என்றும் ஐஐடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் தங்கியுள்ள மாணவிக்கு அனைத்து விதமான வசதிகளையும் ஒத்துழைப்பையும் அவர் படிப்பை முடித்து செல்லும் வரை ஐஐடி நிர்வாகம் வழங்கும் என்றும் விளக்கமளித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.