Home /News /tamil-nadu /

Microsoft | மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி கால்செண்டர்: சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!

Microsoft | மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி கால்செண்டர்: சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!

சிபிசிஐடி சோதனை

சிபிசிஐடி சோதனை

குறைந்த விலைக்கு மைக்ரோசாப்ட் லைசன்ஸின் ட்ரையல் வெர்ஷனை தருவதாகக் கூறி பயனாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெற்றுக்கொண்டு வைரஸ் லிங்குடன் கூடிய போலி சாஃப்ட்வேரைக் கொடுத்து அவர்களை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர்

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி கால் சென்டர் நடத்தி வரும் கும்பல் மீது சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி கால் சென்டர்கள் நடைபெற்று வந்த இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கணினி மற்றும் லேப்டாப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரும் மைக்ரோசாப்ட் சாஃப்ட்வேரின் லைசென்ஸ் பெறுவதற்கு சுமார் 9 ஆயிரம் ரூபாய் நிறுவனத்திற்கு செலுத்தி மென்பொருளை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு கணினிக்கு ஒரு முறைதான் லைசென்ஸ் வாங்கி குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். ஆனால் இதை தவறாக பயன்படுத்தி குறைந்த விலைக்கு கிடைக்கும் pirated (போலியான) வெர்ஷனை பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள், ஒரிஜினல் லைசன்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் வாங்காமல் பயன்படுத்தி வருகின்றனர்.

    Also Read : இனி இணைய பாதுகாப்புக்கு பாஸ்வேர்டுகள் வேண்டாம்... இதோ மாற்று வழி

    இதனை சாதகமாகப் பயன்படுத்தி பைரேட்டட் வெர்ஷனை சாஃப்ட்வேரை பயன்படுத்தும் நபர்களை குறிவைத்து மைக்ரோசாப்ட் பெயரில் போலி கால் சென்டர் மூலம் ஒரு கும்பல் அவர்களை தொடர்புகொண்டும், மின்னஞ்சல் அனுப்பியும் குறைந்த விலைக்கு மைக்ரோசாப்ட் சாஃப்ட்வேர் தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளனர்.

    உலகம் முழுவதும் போலி மைக்ரோசாப்ட் சாஃப்ட்வேர் மூலம் பலரும் மோசடிக்கு உள்ளாகி வருகின்றனர். இச்சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மைக்ரோசாப்ட் பெயரில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்யும் கும்பல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை மீண்டும் அனுமதித்தால் சஸ்பெண்ட் - அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!


    அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சி.பி.சி.ஐ.டி சைபர் செல் பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அப்புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் ஆயிரக்கணக்கானோர் இந்த மோசடிக் கும்பலிடம் சிக்கி  பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயரில் செயல்படும் மோசடி கும்பல் கணினி பயன்பாட்டாளர்களை அணுகி குறைந்த விலைக்கு மைக்ரோசாப்ட் லைசன்ஸின் ட்ரையல் வெர்ஷனை தருவதாகக் கூறி பயனாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெற்றுக்கொண்டு வைரஸ் லிங்குடன் கூடிய போலி சாஃப்ட்வேரைக் கொடுத்து அவர்களை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர்.

    பின்னர் அந்த வைரஸ் லிங்க் மூலம் பயனாளர்களின் கணினியில் உள்ள தரவுகளை திருடுவதும் சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறிது நாட்களுக்குப் பின் மீண்டும் அதே வைரஸ் லிங்க் மூலம் பயனாளர்களின் கணினி செயல்பாட்டை தடுத்து, அதற்காக கால் சென்டரை அணுகும் பயனாளர்களை அவர்களின் தரவுகளைப் பயன்படுத்தி மிரட்டும் மோசடி கும்பல் அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை இந்திய பணமாகவோ அல்லது டாலர்களாகவோ செலுத்துமாறு வற்புறுத்துவதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    மேலும் படிங்க: ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. பள்ளி வகுப்புகள் குறித்து 25-ம் தேதி முக்கிய அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்


    இந்தப் போலி மைக்ரோசாப்ட் சாஃப்ட்வேர் மூலமாக கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கி தகவல்களையும் திருடி பண மோசடியில் இக்கும்பல் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் இந்த மைக்ரோசாப்ட் போலி கால்சென்டர் கும்பல் குறித்து கொடுக்கப்பட்ட விரிவான புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவு போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் சென்னையில் காட்டப்பட்ட ஐ.பி முகவரி மூலமாக போலி கால் சென்டர் நடத்தும் இடங்களை அடையாளம் கண்டு சுமார் 10 இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் இந்த போலி கால் சென்டரில் வேலை பார்ப்பவர்கள் பி.பி.ஓ போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் ஆக இருப்பதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்


    இந்த சோதனையின் முடிவில் மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல எத்தனை பேர் போலி கால் சென்டர் மோசடி கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கோணத்திலும் சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் போலீசார் சைபர் நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போலி மைக்ரோசாஃப்ட் கால் சென்டர் மோசடி கும்பல் தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ளவர்களையும்  கூட குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் இந்த போலி கால் சென்டர் கும்பலை நடத்தி வருபவர்களை அந்தந்த மாநில போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: கன்னியப்பன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: CBCID, Microsoft

    அடுத்த செய்தி