ஆந்திர மாநிலத்தில் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மிகப் பெரிய பெட்ரோல் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. பெட்ரோல் பங்க்கில், இயந்திரங்களில் சிப் பொருத்தி குறைந்த பெட்ரோல் விநியோகித்த அந்த ஊழலில், பங்க் உரிமையாளர்கள் முதல் ஊழியர்கள் வரை பலர் சிக்கினர்.
அதேபோல் சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு பெட்ரோல் பங்க்கில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த ஒரு டிஎஸ்பி, செவ்வாய்க்கிழமை பிற்பகலில், வில்லிவாக்கம் எம்.டி.ஹெச் சாலையிலுள்ள, பாரத் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் நவீன்குமார் என்டர்பிரைசஸ் என்ற பெட்ரோல் பங்க்கில் தனது புதிய இருசக்கர வாகனத்திற்கு 250 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார்.
பெட்ரோல் போட்டுவிட்டு சில மீட்டர் தூரம் சென்றபிறகு இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் குறியீட்டு முள் தவறாக காண்பித்துள்ளது. சந்தேகமடைந்த டிஎஸ்பி மீண்டும் பெட்ரோல் பங்க் வந்து இது குறித்து கேட்டுள்ளார்.
ஆனால் பெட்ரோல் பங்க் ஊழியர்களோ, தங்கள் சரியான அளவில்தான் பெட்ரோல் நிரப்பியுள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தான் யார் என டிஎஸ்பி கூறியவுடன், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், அவருக்கு வழங்கப்பட்ட பெட்ரோலை அளப்பதற்கு சம்மதித்துள்ளனர்.
அளந்து பார்த்தபோது 800 மில்லி பெட்ரோல் குறைவாக இருந்தது தெரியவந்தது; லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அதிர்ச்சி அடைந்தார்.
விவகாரம் பெரிதாவதைக் கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக, குறைவுபட்ட 800 மில்லி பெட்ரோலைக் கொடுத்து அதற்கான ரசீதை 50 ரூபாய் மற்றும் 30 ரூபாய் எனப் பிரித்துக் கொடுத்துள்ளனர்.
2.45 லிட்டர் பெட்ரோலில், 800 மில்லி பெட்ரோல் குறைந்ததால் டிஎஸ்பி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட பங்க் மீது நடவடிக்கை எடுக்கும்படி வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரின் பேரில் வில்லிவக்கம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பெட்ரோல் பங்க் மேனேஜர் மோகன்ராஜ், தாங்கள் சரியான அளவையே விநியோகிப்பதாகக் கூறி பெட்ரோலை அளந்தும் காட்டியுள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இதுபோல பெட்ரோல் மோசடி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினால், ஆந்திராவைப் போல மெகா மோசடி அம்பலம்ஆக வாய்ப்பு உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.