சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை இம்மாதம் 9ஆம் தேதி தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா. பட்ஜெட் மீதான விவாதமும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் மேயர், துணை மேயர் இல்லாததால், அதிகாரிகள் தயாரித்த பட்ஜெட் நேரடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது. ஆறு ஆண்டுக்கு பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தற்போது 200 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, மறைமுக தேர்தலில் பெரும்பான்மை அடிப்படையில், திமுக-வைச் சேர்ந்த பிரியா மேயராகவும், மகேஷ்குமார் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால், 6 ஆண்டுக்கு பின், மாநகராட்சி பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேயர் பிரியா பதவியேற்று முதல் பட்ஜெட் என்பதால், மாநகராட்சி வளர்ச்சி, மக்களுக்கான புதிய அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Read More : சொத்துவரி உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சேகர் பாபு
இந்நிலையில் 2022 -23ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் ஏப்ரல் 9ம் தேதி மாமன்றத்தில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதமும் அன்றே நடைபெற உள்ளது. இறுதியில் 2022-23ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் வருவாயை பெருக்குவதற்கான ஆதாரங்கள், மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிங்கார சென்னை திட்டம், மழைநீர் வடிகால்வாய் போன்றவை முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
Must Read : நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? - ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு விளக்கம்
கடந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட் ரூ.2,438 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. மூலதன செலவினத்தை விட வருவாய் 2,084 கோடி ரூபாயாக இருந்தது. நிதி பற்றாக்குறையின் நிலையில் கொரோனா மற்றும் மழை வெள்ளம் போன்றவற்றின் செலவினம் அதிகரித்தது. இந்நிலையில், 2022-23ஆம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டில் தரமான சாலைகள், மழைநீர் வடிகால், ஸ்மார்ட் சிட்டி போன்ற நகரை அழகுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.