நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில்
சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுகளில்
திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், 134வது வார்டில் மட்டும்
பாஜக வேட்பாளரான உமா ஆனந்தன் வெற்றி பெற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும்பாலான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அப்போது இருந்த 10 மாநகராட்சிகளையும் கைப்பற்றி அதிமுக சாதனை படைத்தது. அதேபோன்று தற்போது 21 மாநகராட்சிகளும் திமுக வசம் ஆகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாஜக கணிசமான வெற்றியை இந்த தேர்தலில் பதிவு செய்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சித் தேர்தலில் 134வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 2ஆயிரம் வாக்குகளை அவர் கூடுதலாக பெற்றுள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமா ஆனந்தன், ’ என்னை தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நன்றி, கட்சியினர் கடுமையாக வேலை செய்து என்னை வெற்றி அடைய செய்துள்ளனர்’ என்று குறிப்பிட்டார். நீங்கள் கேட்சே ஆதரவாளர் என்று கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சர்ச்சைக்கு இடமளிக்க விரும்பவில்லை. 3 , 4 வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி அது. ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.
சென்னையில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில்,பாஜக சார்பில் ஒற்றை ஆளாக வெற்றிபெற்றதுள்ளது தொடர்பான கேள்விக்கு, வாஜ்பாய், அத்வானி மக்களவையில் எப்படி தொடங்கினார்கள்? இன்று எப்படி இருக்கிறோம். சிங்கம் சிங்கிளாகத் தான் வரும் என உமா ஆனந்தன் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.