சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது . மேயர் பிரியா ராஜன் இதனை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆறு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கைக்கான மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது . திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் இக்கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
'ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லைபோகாறு அகலாக் கடை' எனும் திருக்குறளுடன் தனது முதல் பட்ஜெட் உரையை தொடங்கிய மேயர் பிரியா ராஜன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், - சென்னையில் மழைநீர் தேங்கி வெள்ளம் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க உலக வங்கி, ஜெர்மன் வங்கி , ஆசிய வளர்ச்சி வங்கி , தமிழ்நாடு அரசு ஆகிய அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெற்று 1234.88 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் 6234.95 கோடி செலவில் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
பள்ளிகளில் சானிடரி நாப்கின்
நிர்பயா நிதியின் கீழ் மாநகராட்சி பள்ளிகளில் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்க 23.66 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்புகாக பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த 5.47கோடியும் மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி வழங்க 6.91கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இதையும் படிங்க : எனக்கும் இந்தி தெரியாது' - பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் பேச்சால் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் சிரிப்பலை
மேலும், 28 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் . சென்னை மாநகராட்சியில் புதிதாக மூன்று டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும் , படிப்படியாக அனைத்து மண்டலங்களில் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும். மாநகர் முழுவதும் கொசு ஒழிப்புக்காக 4.62 கோடி ஒதுக்கப்படும். வீடற்றவர்கள் தங்குவதற்காக புதிதாக மூன்று காப்பகங்கள் உருவாக்க 2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், மனநலம் பாதித்து சாலையில் திரிபவர்கள் தங்குவதற்கும் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் மேயர் பிரியா ராஜன் அறிவித்தார்.
கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல்
மாநகரில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொண்டு மாதம் 100டன் அளவு உரம் தயாரித்து சந்தைப்படுத்தப்படும் என்றும் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல், கழிவுகள் கொண்டு உயிரி எரிவாயு(bio-gas) உற்பத்தி செய்ய புதிதாக 6 நிலையங்கள் அமைக்கப்படும். மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர சாய்தள பாதை, சென்னையில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை பராமரிக்கவும் மேம்படுத்த 16.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்,
மேலும் படிக்க: இந்துஸ்தானாக மாற்ற முயலும் நடவடிக்கை- இந்தி குறித்த அமித்ஷா கருத்துக்கு சீமான் கடும் கண்டனம்
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகர் முழுவதும் 2.5லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும், தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நிர்பயா திட்ட நிதிகளை கொண்டு 366 இடங்களில் உள்ள 918 கழிப்பிட இருக்கைகள் மற்றும் 671 சிறுநீர் கழிப்பான்கள் 36.34 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும். சென்னை 2.0 திட்டத்தில் மாநகரை அழகுப்படுத்த 26 இடங்களில் நீரூற்றுகள் அமைக்க 1.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
டிஜிட்டல் முறையில் சாலையின் பெயர்கள்
சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை டிஜிட்டல் முறையில் மாற்ற 8.43கோடி ஒதுக்கீடு செய்யப்படும், டிஜி லாக்கர் (Digi locker) வழியாக வர்த்தக உரிமங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி, சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமமின்றி விரைவாக செய்து முடிக்க e-office , நவீன QR குறியீட்டினை பயன்படுத்தி பொதுமக்கள் சொத்து வரி செலுத்த வழிவகை செய்யப்படும் சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மிகப் பெரிய குளங்கள் புனரமைப்புக்கு ரூ. 143 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதையும் படிக்க: பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க நீதிமன்றம் உத்தரவு
இவ்வாறான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மேயர் பிரியாராஜன், தன்னை மேயராக தேர்ந்தெடுத்தற்காக முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தார். பின்னர் ''கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்...''எனும் திருக்குறளுடன் தனது பட்ஜெட் அறிமுக உரையை நிறைவு செய்தார்.
நிதி பற்றாக்குறை
தொடர்ந்து நிதிநிலை வரவு செலவுகளை தாக்கல் செய்தார் கணக்குகுழு தலைவர் சர்பஜெயாதாஸ். அதில், 2022-23 நிதியாண்டில் வருவாய் வரவு ரூ.2,824.77 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,613 கோடியாகவும், மூனதன வரவு 2528.80 கோடியாகவும் செலவு ரூ.2,510.24 கோடியாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படிசென்னை மாநகராட்சிக்கான நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை ரூ.770.02 கோடியாக இருக்கும் என உத்தேசிக்கப்படுகிறது.
எதெதற்கு எவ்வளவு ஒதுக்கீடு
நிதிநிலை அறிக்கையில் , பேருந்து சாலைகளுக்காக ரூ.36.08 கோடி நிதி ஒதுக்கீடு, மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக மொத்தம் ரூ.1,235 கோடி ஒதுக்கீடு, புதிய பாலங்கள் கட்டுமானம் மற்றும் பாலங்கள் விரிவுபடுத்தும் பணிகளுக்காக ரூ.221.30 கோடி ஒதுக்கீடு, புதிய தெரு மின்விளக்குக் கம்பங்கள் அமைக்கும் பணிகளுக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு, திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ரூ.424.01 கோடி ஒதுக்கீடு,
பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் பணிகளுக்காக ரூ.55 கோடி, இயந்திரப் பொறியில் பணிக்களுக்காக ரூ.106 கோடி, - சிறப்பு திட்டங்கள் பணிகளுக்காக ரூ.136 கோடி நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக - கருப்பு சட்டை, வெளிநடப்பு
முன்னதாக சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை கண்டித்தும் திரும்பபெற வலியுறுத்தியும் அதிமுக கவுன்சிலர்கள் இருவர் மட்டும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பின்னர் அவையில் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விவாதத்தில் பேசிய சில உறுப்பினர்களும் சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினர். இதன்மீது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என துணை மேயர் மகேஷ்குமார் உறுதியளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.