சென்னை அண்ணா நகர் மகளிர் விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவரும் 25 வயது இளம்பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சமூக வலைத்தளத்தின் மூலம் தனக்கு அறிமுகமாகி காதலித்து வந்த ராஜ் என்ற நபர் தன்னுடைய ஆபாசப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் இல்லை என்றால் தன் குடும்பத்தாருக்கும் தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து விடுவதாக கூறி மிரட்டுவதாகவும் எனவே தன்னை மிரட்டும் ராஜ் என்பவரை கைது செய்யவில்லை எனில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அப்புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார், காவல் ஆய்வாளர் சாந்தி தேவி தலைமையில் ராஜ் என்பவரை தேடும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இளம்பெண்ணுக்கு 5 எண்களில் இருந்து வந்த செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது அவற்றில் ஒரு நம்பரை தவிர மற்ற அனைத்து சிம்கார்டு எண்களும் போலியான ஐ.டி., கொடுத்து வாங்கப்பட்டு இருப்பதும் ஒரே ஒரு சிம் கார்டு மட்டும் தேனி மாவட்ட முகவரியில் இருந்ததும் தெரிய வந்தது.
Also Read: தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்களின் நிலை என்ன? - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் தேனி மாவட்டம் சென்ற போலீசார் சிம்கார்டு முகவரியில் இருந்த தேனி மாவட்டம் கன்னி சேர்வைபட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த மனோஜ் குமார்(29) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த மனோஜ்குமாரிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது மனோஜ்குமார் தான், ராஜ் என்ற போலியான சமூக வலைதள கணக்கு மூலம் இளம்பெண்ணிடம் பழகி அவரை மிரட்டியது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மனோஜ்குமார் கோயமுத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வேலைக்கு செல்லாமல் சொந்த ஊரில், ஊர் சுற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு முடி முழுவதும் கொட்டி தான் மொட்டை அடித்துக் கொண்டிருந்ததால் தன்னிடம் எந்தப் பெண்களும் பேசவில்லை எனவும் அதனால் அழகாக இருக்கும் ஆண்களின் புகைப்படத்தை வைத்து ஃபேக் ஐ.டி உருவாக்கி அதன் மூலம் பெண்களிடம் பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read: அதிகாரிகளை மிரட்டும் வேலையை விடுங்க.. அதிமுகவினருக்கு செந்தில் பாலாஜி எச்சரிக்கை
அப்படி அழகான ஆணின் புகைப்படத்தோடு ராஜ் என்ற பெயரில் ஃபேக் ஐடி உருவாக்கி இளம் பெண்ணிடம், "உங்களை தனக்கு 7 வருடமாக தெரியும் எனவும், ஆனால் தங்களுக்கு என்னை தெரியாது எனவும் கூறி கோயமுத்தூரில் உள்ள தனியார் வங்கியில் நான் தற்போது மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும் தங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும்" கூறியுள்ளார். இவர் கூறியதை உண்மை என நம்பிய இளம்பெண் பேக் ஐ.டி புகைப்படத்தை பார்த்து இருவரும் காதலித்து வந்தததும் தெரியவந்துள்ளது.
மேலும், தனிமையில் இருக்கும்போது இருவரும் ஆபாசமாக மெசேஜ் செய்தும், ஆபாச புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த இளம்பெண்ணின் ஜி.மெயில் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதள கணக்குகளின் பாஸ்வேர்டை பெற்று அவற்றிலிருந்து இளம் பெண் குறித்த விவரங்கள் மற்றும் அவரது அனைத்து போன் நம்பர்களையும் மனோஜ்குமார் எடுத்து வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் மனோஜ்குமார் அலுவலக பிரச்சினையின் காரணமாக தனக்கு ரூ.50 ஆயிரம் பணம் அவசரமாக வேண்டும் எனக் கேட்க, இளம்பெண் ரூபாய் 20 ஆயிரம் பணம் அனுப்பி மீதம் உள்ள தொகையை கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனால் மனோஜ்குமார் தனக்கு உடனடியாக பணம் வேண்டும் எனவும் இல்லை என்றால் நீ எனக்கு அனுப்பிய ஆபாச புகைப்படங்கள், ஆபாச மெசேஜ் ஆகியவற்றை உன்னுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அனுப்பி வைத்து விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் பி.டெக் படிப்பு படித்து முடித்த மனோஜ்குமார் வேலையில்லாமல் ஊர் சுற்றி வந்ததாகவும் அதனால் தனது பணத்தேவைக்கு பெண்களைக் காதலித்து மிரட்டி அவர்களின் மூலம் பணம் பறித்துக் கொள்ளலாம் என திட்டம் தீட்டி முதலில் இந்த இளம்பெண்ணிடம் மோசடியில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.
குறிப்பாக ட்ரூ காலரில் ரேண்டம் மொபைல் எண்களை பதிவிட்டு பெண்கள் பெயர் வந்தால், அதன் மூலம் பழகி காதல் பெயரில் பெண்களை ஏமாற்றுவதற்காக, அதிக அளவில் பணம் கொடுத்து பத்துக்கும் மேற்பட்ட போலி சிம் கார்டுகளை வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருப்பதையும், சில பெண்களிடம் தற்போது தான் பேச ஆரம்பித்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மனோஜ் குமாரிடமிருந்து 10க்கும் மேற்பட்ட போலி முகவரி சிம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.விசாரணைக்குப் பிறகு மனோஜ் குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Criminal cases, Lovers, Online crime, Police, Police arrested, Sexually harassing