சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் மற்றும் ரேசில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறார்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்திருந்தது.
இருசக்கர வாகன சாகசம் மற்றும் ரேசில் ஈடுபடுவோரை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதுவரை 37-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை கோயம்பேடு 100 அடி சாலை நெசப்பாக்கம் புதிய மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதுடன் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட நபரின் வாகன எண் மற்றும் அடையாளங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் உசேன் (19) என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சாகசத்தில் ஈடுபட பயன்படுத்திய அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆஷிக் உசேன் சென்னையின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சாகசங்களை நிகழ்த்தி வந்துள்ளார்.
மேலும் அதனை வீடியோவாக எடுத்து சைக்கோ ஸ்டண்ட்ஸ் என்ற தனது சமூக வலைதளபக்கத்தில் லைக்குகளுக்காக பதிவேற்றி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஆஷிக் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்த அனைத்து சாகச வீடியோக்களையும் நீக்கியது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆஷிக் உசேனின் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.