மதுவிருந்து கொடுக்கப்பட்ட இடத்தில் நடந்த இரட்டைக் கொலையில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி மணிகண்டனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (வயது 30) என்பவரும், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெகன் (30) என்பவரும் 2019-ம் ஆண்டில் வெவ்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது நண்பர்களானார்கள். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்தது.இருவரும் சேர்ந்து ஆவடி பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஜெகன், அடிக்கடி மணிகண்டன் வீட்டுக்கு சென்று வந்தார்.அப்போது மணிகண்டனின் மனைவி ப்ரேசில்லாவுடன்பழக்கம் ஏற்பட்டது.
Also Read: சகோதரி மகள் கூறியதைக்கேட்டு அதிர்ந்துபோன மாமா.. காவலரான தந்தை போக்சோவில் கைது
அதன் பிறகு மணிகண்டனின் மனைவியை ஜெகன் தன்னுடன் அழைத்துச்சென்று விட்டதாகவும், அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் மாலதி என்ற விதவை பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.இந்த முன்விரோதம் காரணமாக மணிகண்டன், ஜெகன் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் ஜெகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் ஆவடி பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மணிகண்டனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததாக தெரிகிறது. அப்போது ஜெகன் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் இந்த வீடியோவை டெலிட் செய்து விடுவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெகனை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தார்.
ஜெகன் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் தனது நண்பர்களான அசாருதீன், சுந்தர் உள்பட மேலும் சிலருடன் சேர்ந்து ஆவடி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் மது அருந்தினார். இதையறிந்த மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 10 பேர் ஜெகனை தீர்த்து கட்டுவதற்காக அங்கு சென்றனர். மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை பார்த்ததும் ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
Also Read: ஆபாச வீடியோ.. பாலியல் வன்கொடுமை - சென்னையில் துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்
அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஜெகனின் நண்பர்களான அசாருதீன், சுந்தர் இருவரையும் மணிகண்டனின் கூட்டாளிகள் சுற்றி வளைத்து சரமாரியாக முகம் கை கால் உள்ளிட்ட பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இதில் இருவரது கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியதுடன், முகத்தையும் சிதைத்து விட்டு தப்பி ஓடிவிட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் ஆவடி டேங்க் பேக்டரி ஆய்வாளர் ராஜு பிரின்ஸ் ஆரோன் இந்த கொலை தொடர்பாக 5 பேரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துவருகிறார்.கொலையான அசாருதீனுக்கு கவுரி என்ற மனைவி உள்ளார். தற்போது அவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.சுந்தருக்கு, பிரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ள நிலையில் இந்த இரட்டை கொலை சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: கன்னியப்பன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.