சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கடந்த 18ஆம் உதவி ஆய்வாளர் தலைமையிலான தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிசிஐடி இந்த வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் சந்தேக மரணம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்தினர் முன்வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இறப்பை மறைக்க மறைமுகமாக காவலர்கள் 1 லட்சம் ரூபாய் கொடுத்ததாக காவல் நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் தெரிவித்த தகவல், காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஆட்சியர் மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், லாக்கப் மரணத்தை மறைக்க போலீசார் சட்டவிரோதமாக் கொடுத்ததாக சொல்லப்படும் ரூ.1 லட்சத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், நீதி விசாரணை நடத்தும் நீதிபதி யஸ்வந்த் ராவிடம் திருப்பிக் கொடுத்தனர்.
Must Read : 2 சிறுவர்களை கிணற்றில் மூழ்கடித்து கொலை செய்த சித்தப்பாவிற்கு வாழ்நாள் சிறை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
லாக்கப் மரணத்தை மறைக்கவே காவல்துறையினர் பணம் வழங்கியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கெல்லீஸ் கிக்னல் அருகில் சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை காவல்துறையினர் உருட்டுக் கட்டையால் தாக்கியதாக, அவர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் என்பவர் தனது பெயரை ரமேஷ் என்று மாற்றி கூறியதாகவும் ஆனால் அவரின் பெயர் சுரேஷ் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தி, அவரை தாக்கியதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.