Home /News /tamil-nadu /

கண் பார்வையின்றி கர்ஜிக்கும் சிங்கப்பெண்... தமிழக அரசு நிரந்தர பணி வழங்க கோரிக்கை

கண் பார்வையின்றி கர்ஜிக்கும் சிங்கப்பெண்... தமிழக அரசு நிரந்தர பணி வழங்க கோரிக்கை

Youtube Video

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணியாற்றி வரும் பார்வை மாற்றுத்திறனாளிக்கு அரசு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    21 வயதில் மேற்படிப்பு, திருமணம், வாழ்க்கை திட்டம் என எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அரிய நோயால் பார்வை இழந்து விட்ட இவர், தன் அன்றாட வாழ்க்கையை சிங்கப் பெண்ணாக எதிர்கொண்டு வருகிறார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஆய்வகத்தில் 2011ம் ஆண்டு ஆய்வக தொழில்நுட்பனராக பணியில் சேர்ந்தார் அனிதா. அடுத்த ஆறு மாதங்களில்

    நியூரோ ப்ருசெலோசிஸ் ( neuro brucellosis)என்ற நோயால் பாதிக்கப்பட்டார். தோள்பட்டை வலி, கழுத்து வலி, அதீத வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளுடன் தொடங்கிய நோய், ஒரு மாதத்துக்குள் பார்வையை பறித்து விட்டது. அதன்பிறகு ஏழு ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த அனிதா, ப்ரெய்ல் மொழியை கற்றுக் கொண்டார். மேலும், சொந்த முயற்சியில் இளங்கலை வரலாறு முடித்து, பின் அக்குபஞ்சர் மருத்துவத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றார். தற்போது உளவியலில் முதுநிலை பயின்று வருகிறார்.

    இதற்கிடையே, 2018ம் ஆண்டு அவர் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் மக்கள் ஆலோசகராக தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டார். தனக்கு அரசு நிரந்தர பணி வழங்க வேண்டும் என தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அவர் கோரிக்கை வைத்து வருகிறார். நியூரோ ப்ருசெலோசிஸ் நோய் பொதுவாக கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும், மிக அரிதாக மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக் கூடும் என சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை இயக்குநர் லக்ஷ்மி நரசிம்மன் கூறுகிறார்.



    பார்வை மாற்றுத்திறனாளி அனிதா விவகாரத்தில் மாற்று திறனாளிகள் ஆணையரகமும், பணியிடங்களில் ஏற்படும் ஆபத்துக்கான இயக்குனரகமும் தலையிட வேண்டும் என்று டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழக அரசின் அரசாணை 151-ன் படி இரண்டு ஆண்டுகள் தொகுப்பூதிய பணியில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என கூறுகிறது. இந்த அரசாணை அனிதாவுக்கு பொருந்தினால் அதை கண்டிப்பாக உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது. மேலும், அனிதாவுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டுமென தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு , சுகாதாரத்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, Disease

    அடுத்த செய்தி