அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழ் நாடு சீரழிந்திருக்கும் என்றும்
பாஜகவின் இழுத்த இழுப்புக்கெல்லாம் தலையாட்ட கூடிய கட்சியாக அ
திமுகவும் அதன் தலைவர்களும் கடந்த காலத்தில் விளங்கினார்கள் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது இதற்காக அரசியல் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி தலைவர்கள் என தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 7 க்கு உட்பட்ட 84 வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகுமார் மற்றும் 85 வது வார்டில் போட்டியிடும் பொற்கொடி கண்ணபிரானுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திறந்த வாகனத்தில் அம்பத்தூர் பாடி, எஸ்டேட் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவருக்கு கட்சித் தொண்டர்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தபோது பேசிய அவர், தேசிய அளவில் பாஜகவை தொலுரித்து மக்களிடையே அம்பலப்படுத்தும் ஆற்றல்மிக்க இயக்கமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியா முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக் கூடிய வகையில் விவசாயிகள் போராட்டத்தை 1 ஆண்டுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்தினர் என்றால் அதிலே கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு நடத்துகின்ற விவசாய சங்கங்கள் முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது.
இதையும் படிங்க: ஆவின் மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜியிடம் 11 மணி நேரம் விசாரணை
தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் அதிமுக ஆண்டிருக்காது. பாஜகவின் இழுத்த இழுப்புக்கெல்லாம் தலையாட்ட கூடிய கட்சியாக அதிமுகவும் அதன் தலைவர்களும் விளங்கினார்கள். ஆகவே மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழ் நாடு சீரழிந்திருக்கும் இந்த நாசகார சக்திகள் பிடியில் சிக்கியிருக்கும் என்றார்.
செய்தியாளர்: கண்ணியப்பன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.