• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அம்மா உணவகங்களில் ஆட்குறைப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு: அண்ணா அறிவாலயம் முன்பு ஊழியர்கள் போராட்டம்!

அம்மா உணவகங்களில் ஆட்குறைப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு: அண்ணா அறிவாலயம் முன்பு ஊழியர்கள் போராட்டம்!

அம்மா உணவகங்களில் ஆட்குறைப்பு செய்யப்படுவதாக குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில்  ஊழியர்களை குறைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி 50க்கும் மேற்பட்ட அம்மா உணவக பணியாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க தங்களை அறிவாலயத்தினுள் அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

சென்னை மாநகருக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்கள்  செயல்பட்டு வரும் நிலையில், அம்மா உணவகங்களின் மாதாந்திர வருமானம் அடிப்படையில், குறைவாக வருமானம் ஈட்டும் கடைகளின் பணியாளர்கள் அதிக வருமானம் ஈட்டும் கடைகளுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, பல்வேறு அம்மா உணவகங்களில் 4ல் ஒரு பங்கு ஊழியர்கள் கணக்கிடப்பட்டு இன்று முதல் அவர்கள் பணிக்கு வர வேண்டாம் என மண்டல சுகாதார ஆய்வாளர்கள் மூலம்  வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி திமுக தலைமையகமான  அறிவாலயம் முன்புறம் முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தரும் நேரத்தில் 50க்கும் மேற்பட்ட அம்மா உணவக ஊழியர்கள் ஒன்று கூடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக மாநகராட்சி சார்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து போராட்டம் நடத்திய அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: