கடந்த ஞாயிற்றுக் கிழமை ரயில்வே பணிமனையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக, மின்சார ரயில் கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு மாலை 4.25 மணிக்கு வந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ரயில், தடுப்பு மீது மோதி, நடைமேடை மீது ஏறியதுடன், நடைமேடைக்கு வெளியே இருந்த கடையின் சுவற்றின் மீது மோதி நின்றது. அப்போது எஞ்சின் பெட்டியில் இருந்து ஓட்டுநர் வெளியே குதித்து உயிர் தப்பினார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதுடன், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். ரயில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், வேறு யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர், உடனடியாக மாற்று நடைமேடையில் இருந்து ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. விபத்துக்குள்ளான மின்சார ரயிலில் மொத்தம் எஞ்சினையும் சேர்த்து 12 பெட்டிகள் இருந்தன. 10 பெட்டிகள் உடனடியாக பிரித்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மாலை 6.30 மணியளவில் நடைமேடை மீதேறிய பெட்டி மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் அளித்த புகாரின் பேரில், சென்னை எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, உயிர்க்கு அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக ரயிலை இயக்கியது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279 - மற்றவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதி வேகமாக வாகனங்களை இயக்குதல் ரயில்வே சட்டம் பிரிவு 151, 154 ஆகிய மூன்று பிரிவுகளில் ஓட்டுநர் பவித்திரன் மீது எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஓட்டுநர் பவித்திரனிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால், ரயில்வே துறையின் விசாரணை அறிக்கைக்கு பின்பு ஓட்டுநர் பவித்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
Must Read : இமயமலையில் ஏறி சாதனை படைத்த ஆட்டிசம் பாதித்த கோவை சிறுவன்.!
மேலும், விபத்து ஏற்பட்டபோது பிரேக் பிடிக்கவில்லை என்று, தவறுதலாக ரயிலை இயக்கிய ஓட்டுனர் பவித்திரன் தெரிவித்ததாகவும், ஆனால் விசாரணையில் பிரேக்கை பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை தவறுதலாக அழுத்தியது தெரியவந்திருப்பதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.